திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசம் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை – சேலம் இடையே பசுமை வழிச் சாலை அமைப்பதற் காக நிலம் அளவீடு செய்து, குறியீடு கற்கள் பதிக்கும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்றது. நிலம் கையகப்படுத்துவதில் ஆட்சேபனை இருந்தால், தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 9 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் பெறப்பட்ட 627 மனுக்களில், 577 பேர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, வழக்கறிஞர் எஸ்.அபிராமன், 8 வழிச் சாலை எதிர்ப்புக் குழுவினர் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.  அதில், “ நிலம் கையகப்படுத்துவது குறித்து அட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சம் இல்லாமல் ஆட்சேபனை மனுக்களை அளிக்கலாம் என்ற வெளிப்படையான அறிவிப்பை ஆட்சியர் தெரிவிக்க வேண்டும், நாளிதழ்களில் நிலம் எடுப்பு சம்மந்தமாக வெளியான அறிவிப்பில்  குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு பதிலாக வேறு சில சர்வே எண்களிலும் அளவீடு நடத்தப்படுகிறது. எனவே, வழித்தடம் மாறும் பகுதியில் அறிவிக்கப்படாத சர்வே எண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் செல்வா நகரில் செயல்படும்தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மனு அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: