ஓசூர்,
ஓசூர் சிப்காட்டில் கடந்த 33 ஆண்டுகளாக ஈசன் ரீரோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 500க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையில், 6 பெண்கள் உட்பட 68 நிரந்தர தொழிலாளர்களும், 100க்கும் மேற்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் மின்சாரத்திற்கு பயன்படும் பேனல் போர்டுகள், உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்லலாபத்துடன் தொழிற்சாலை இயங்கிவந்துள்ளது. தற்போது வேறு சில மாநிலங்களிலும் இத்தொழிற்சாலையின் கிளைகள் ஒப்பந்த அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை நட்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டி கடந்த 5 ஆண்டுகளாக 6 மாதங்கள் வரை கூட ஊதியம் கொடுக்காமல் பழிவாங்குகிறார்கள் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். கடந்த 33 ஆண்டுகளாக தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதித்தொகையை (பி.எஃப்) முறையாக அரசு வைப்புநிதியில் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக ஊக்கத் தொகை வழங்கியதே இல்லை, ஊதிய ஒப்பந்தமும் போடவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 29 ஆம் தேதியிலிருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஈசன் நிர்வாகம் ஜூலை 14 முதல் 31 வரை லேஆப் ஐ அறிவித்துள்ளது. எனவே சட்டவிரோத லேஆப் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும், உடனடியாக 6 மாத சம்பளம் பாக்கி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் தொழிலாளர்களின் பிரச்சனையில், அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பீட்டர், தலைவர் ஜெயராமன், மாநிலக்குழு உறுப்பினர் சிறீதர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: