சென்னை,
வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி தொழிலாளர்களை பழிவாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு பெருந் திரள் கேட்பு இயக்கம் புதனன்று (ஜூலை 11) நடைபெற்றது. தலைவர் ப.பாலகிருஷ்ணன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.  பின்னர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய ஒப்பந்தப்படி பஞ்சப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 ஏப்ரம் மாதம் வரை வழங்க வேண்டும். ஆனால் மற்ற போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் மாநகரபோக்குவரத்து கழகத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்பவிடுப்பு அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது.

விடுப்பு இருப்பில்  இருந்தும் பணிக்கு வரவில்லை என்று கூறி சம்பளத்தை பிடித்தம் செய்கிறார்கள். மேலும் விடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. துரோக ஒப்பந்தத்தை எதிர்த்து நடைபெற்ற வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் வழங்க வேண்டிய ஆய்வு பலன்களை நிறுத்தி வைத்துள்ளார்கள். மேலும் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை தள்ளிப் போடுகிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவர் சான்றளித்தும் இலகு பணி வழங்க மறுக்கிறார்கள்.  வருங்கால வைப்பு நிதியில் கல்வி, திருமணம், மருத்துவம் ஆகியவற்றிற்கு கடன் வழங்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால் எங்கள் பணத்தையே தர மறுக்கிறார்கள். உழைத்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு கேண்டினில் சுகாதாரமற்ற தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் இதுவரை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இயக்குநரை சந்தித்து நியாயம் கேட்க போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூடப்பட்ட வாயிற் கதவு திறப்பு
முன்னதாக பல்லவன் அலுவலக வாயிற்கதவு மூட்டப்பட்டது. தொழிலாளர்கள் வாயிற்முன் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர். இது எங்கள் அலுவலகம் வாயிற்கதவை திறந்தால்தான் பேச்சுவார்த்தை எனக் கூறிவிட்டனர். இதையடுத்து வாயிற்கதவு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ப.பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் பாலாஜி, சம்மேளனத் துணைத் தலைவர்கள் எம்.சந்திரன். ஏ.பி.அன்பழகன் உள்ளிட்ட 10 பேர் இயக்குநர் அன்பு ஆப்பிரகாம், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஜோசப் டையாஸ் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். அதில் வியாழக்கிழமை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பேட்டா குறித்து பேசிக் கொள்ளலம் என்றும், மற்ற பிரச்சனைகளை விரைவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என உறுதியளியத்துள்ளார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.