மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் அரச மரமொன்று பூமியில் இருந்து வேருடன் எடுக்கப்பட்டு மீண்டும் வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோர பகுதியான தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பெரிய அரச மரமொன்று உள்ளது. தற்போது இக்கோவிலின் ராஜகோபுரம் அமைக்க திருப்பணிகள் துவங்கியுள்ள நிலையில், இதற்காக இந்த அரச மரத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிகவும் செழிப்பாக காணப்படும் இம்மரம், இதுவரை கோவிலை தேடி வந்த பக்தர்களுக்கு நிழல் தந்து வந்த காரணத்தால் இதனை வெட்டி அழிக்க கோவில்நிர்வாகம் மிகவும் தயங்கியது.

இதனை அறிந்த கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான ஓசை என்னும் தன்னார்வ அமைப்பு இம்மரத்தை காக்க முன்வந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அனுமதியுடன் செவ்வாயன்று மாலை கோவில் வளாகத்தின் முன் பகுதியில் இருந்த 36 வயதான இந்த மிகப்பெரிய அரச மரம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பூமியில் இருந்து அப்படியே வேருடன் மேல் நோக்கி எடுக்கப்பட்டது. மரம் வளர்ந்த இடத்தின் தாய் மண் மட்டும் அதன் வேருடன் ஒட்டி இருக்கும் வகையில்மெல்ல மெல்ல அகற்றப்பட்ட இம்மரம், பின்னர் கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு,அதே கோவிலுக்கு அருகில் உள்ள நந்தவனம் என்னுமிடத்தில் மீண்டும் மறு நடவு செய்யப்பட்டது. மிக மிக கவனத்துடன் மரத்தின் உயிர்த்தன்மை பாதிக்கப்படாமல் சுமார் நான்கு மணி நேரத்தில் இப்பணி நிறைவுபெற்றது. ஒரு அரச மரத்திற்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்தது என்பதை விட, மரத்தை காக்க எடுக்கப்பட்ட இம்முயற்சி, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே அமைந்தது.

Leave A Reply

%d bloggers like this: