மே.பாளையம்,
பில்லூர் ஆணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடபட்டிருந்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது.  தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருப்பதால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்ட உயரம் 98 அடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீரை பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு, அதன் மூலம் அணையின் நீர்வரத்தான வினாடிக்கு 18 ஆயிரம்கன அடி நீர்முழுவதும் பவானியாற்றில்திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திங்களன்று முதலே பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக கரையோரபகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே, மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் சிறுமுகை பகுதி வழியே ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பவானிசாகர் அணையை சென்றடைவதால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதிகளாக உள்ள லிங்காபுரம், காந்தபள்ளம், புதுக்காடு, மொக்கைமேடு, அம்மன்புதூர், பெதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரடப்பட்டிருந்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கியதால் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சிறுமுகை சுற்றுவட்டார பகுதி வாழை விவசாயிகள் பெரும் இழப்பில் சிக்கி தவிக்கின்றனர். அணையின் நீர்தேக்க பகுதிகளில் பொதுப்பணித்துறையினரின் அனுமதியோடு வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பல லட்சம் வரை கடன் பெற்று வாழை பயிரிட்ட நிலையில் இவையனைத்தும் ஒரே இரவில் நீருக்கடியில் சென்றதால் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: