சேலம்,
சேலத்தில் பழுதடைந்த பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், கருப்பூரை சேர்ந்தவர் தூயவன். இவரின் மனைவி தாரகை. இவர்களது மகன் சேண்டாஸ் யேசுவா(4). இச்சிறுவன் அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் என்ற தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று மாலை பள்ளி முடிந்தபின்னர் சேண்டாஸ் யேசுவாவும், அவரது தாய் தாரகையும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பள்ளியிலிருந்து சிறிது தூரம் சென்றபோது அப்பள்ளிக்கு சொந்தமான பள்ளி பேருந்து ஒன்று பழுதான நிலையில், மற்றொரு பேருந்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது, தீடீரென கயிறு அறுந்து பழுதடைந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சிறுவன் சேண்டாஸ் யேசுவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனின் தாயார் தாரகை படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த விபத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று கூறியும், உயிரிழந்த சிறுவனுக்கும் சிகிச்சை பெற்றுவரும் தாய்க்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுவனின் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுவனும், அவரின் தாயாரும் பள்ளியின் பழுதடைந்த வாகனத்தால் விபத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர்களை மீட்டு மருத்துமனையில் கூட அனுமதிக்கவில்லை. அவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் தான் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன்பின்னர் காவல்துறையினர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறுவனின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்த விபத்து சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: