திருப்பூர்,
திருப்பூர் தெற்கு தொகுதியில் மொத்தம் 233 வாக்குச்சாவடி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் குமார் நகர் பிரேமா பள்ளி மூடப்பட்டுவிட்டதால் அங்கு செயல்பட்ட 13 வாக்குச்சாவடிகள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறது.

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் புதனன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளரும், வாக்காளர் பதிவு அலுவலருமான மா.அசோகன் தலைமையில் நடைபெற்றது. ஏற்கெனவே கடந்த ஜூலை 2ஆம் தேதி மாவட்ட அளவில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குரிய வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டார். இந்த பட்டியலில் உள்ள வாக்குச்சாவடிகள் பற்றிய திருத்தம், ஆலோசனைகளை அந்தந்த தொகுதி வாரியாக அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்குத் தொகுதிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் 9 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள பிரேமா நர்சரி பள்ளி மூடப்பட்டுவிட்டதால் அங்கு அமைக்கப்பட்ட 13 வாக்குச்சவடிகள் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆணையர் அசோகன் தெரிவித்தார். மேலும் 5 வாக்குச்சாவடிகள் ஏற்கெனவே செயல்பட்ட பள்ளிகளில் உள்ள வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி வாக்குச்சாவடி பட்டியல்களில் மாற்றங்களுக்குப் பின்னர் 233 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாவும், மேற்படி மாற்றங்கள்குறித்து தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்றும் அரசியல் கட்சியினரிடம் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் பங்கேற்றனர். முடிவில் உதவி ஆணையளர் சந்தான நாராயணன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.