நீட் தேர்வுவில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வினாத்தாள் குறித்து டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கிற்கு உதவிய டெக் பார் ஆல் அமைப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த  நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டன. சிறுத்தையை சீதா என்றும் இரத்த நாளங்கள் என்பதற்கு இரத்த நலன் என்றும் இரகத்திற்கு, நகம் என்றும் இடைநிலை என்பதற்கு கடைநிலை என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இதுகுறித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கடந்த மே மாதம் 11 ஆம் தேதியன்று மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அதில், தமிழில் நீட் நுழைவுத்தேர்வில் 49 கேள்விகள் தவறாக உள்ளன என்றும் இதுதொடர்பாக பரிசீலித்து மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதுகுறித்து அமைச்சகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஜூன் 5,6 ஆகிய தேதிகளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. ஜூன் 4 அன்று டி.கே.ரங்கராஜன் எம்.பி., நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் சிபிஎஸ்இ அமைப்பு அவசர அவசரமாக ஜூன் 4 அன்று மாலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது அமர்வு முன்பு விசாரணை நடை பெற்றது.
சிபிஎஸ்இ சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது சிபிஎஸ்இ தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக யாரும் வழக்கு தொடரவில்லை. பொதுநலன் வழக்காகமட்டுமே தொடரப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்வு நடத்த வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த கொள்கையின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டதாகவும், மொழிபெயர்ப்பில் சரியான விடைகள் இல்லாவிட்டால் ஆங்கிலவிடைகள் இறுதியானது எனக் குறிப்பிட்டிருந்த தாகவும் வாதாடினர். இந்த வழக்கு குறித்த விசாரணையில் சிபிஎஸ்இ அமைப்புக்கு உயர்நீதிமன்றம் நான்கு கேள்விகளை கேட்டிருந்தது. அந்த கேள்விகளுக்கு சிபிஎஸ்இ அமைப்பு அளித்த பதிலை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும் நீதிபதிகள் கூறுகையில், தவறான கருத்துக்களை சரியாக்கமுயற்சிக்க வேண்டாம். தற்போது பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சிபெற்றவர்கள் எப்படி அதிகரிக்கப்பட்டார்கள்? கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஏன்? நீங்கள் தவறு செய்ததுதெளிவாகத் தெரிகிறது. தவறான கேள்விகள் இருக்கும் போது எப்படி சரியான பதில்களை எதிர்பார்ப்பீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். ஜூலை 6 அன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள் வழக்கினை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.இந்த வழக்கில் ஜூலை 10 (செவ்வாயன்று) தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் சி.டி. செல்வம், பசீர் அகமது ஆகியோர் அளித்த தீர்ப்பில், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது. சமவாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டு ஜனநாயகப்பூர்வமாக தேர்வை நடத்தியிருக்க வேண்டும். நீட் தேர்வில் தமிழ் மாணவர்களுக்கு கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணைமதிப்பெண்கள் வழங்கவும், தற்போது நடை பெற்று வரும் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்கவும் உத்தர விட்டனர். மேலும் இரண்டு வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, கவுன்சிலிங்கை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தமிழ் மொழியில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது குறித்து டிகே ரங்க ராஜன் தொடுத்த வழக்கிற்கு டெக் பார் ஆல் என்ற அமைப்பு பெரும் உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்று வரும் தமிழ் மாநிலக்குழு கூட்டத்தில் டெக் பார் ஆல் அமைப்பின் பொறுப்பாளர் ராம் பிரசாத் மற்றும் நிர்வாகிகள், ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தை அணுகினால் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி டி.கே.ரங்கராஜன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: