கோவை முத்தன்னன்குளம் பகுதியொட்டி வசிக்கும் மக்களின், வீட்டு வாசலைக் பாதி உயரம் மறைத்து மழை நீர் வடிகால் கட்டப்பட்டிருப்பதால் நாள்தோறும் வீட்டிற்குள் சென்று வர சிரமப்படுவதாக முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை  தடாகம் சாலையில் உள்ள முத்தன்னன் குளம் 21-ம் வார்டு, பகுதியில் சுமார்  1000-க்கு மேற்பட்ட எளிய மக்கள் வசித்து வருகின்றனர். மழை நீர் வடிந்து செல்வதற்காக இப்பகுதியொட்டிய சாலையில் சுமார் 2 கி.மீ அளவிற்கு இந்த பகுதியில் கட்டப்பட்டிருக்கும் மழை நீர் வடிகால், சாலையை விட இரண்டு அடி உயரத்திலும், குடியிருப்புகளின் வாசலை மறைத்து சுமார் நான்கு அடி உயரத்திலும் கட்டப்பட்டிருப்பதால், மழை நீர் வடிய வழியின்றி சாலையை ஆக்கிரமிப்பதோடு,மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வீட்டின் முகப்பை மறைத்து, தரை தளத்தைவிட அதிக உயரத்தில் வடிகால் கட்டப்பட்டதால், தினமும் குனிந்தும் நெளிந்தும் வீட்டிற்குள் சென்றுவர வேண்டியுள்ளதாகவும். சாலை உயரமாகி, குடியிருப்பு பள்ளத்திற்குள் சென்று விட்டதால் மழை நாட்களில் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், பொது குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதற்குக்கூட சிரமம் இருப்பதாகவும், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்க்கு பெரும் சிரமப்படுவதாக அவர்கள் வேதனையுடன்  தெரிவித்தனர்.
இப்பகுதியின் மாநகராட்சியின் முன்னாள்   மாமன்ற உறுப்பினர்   வேல்முருகன்  கூறும் போது,  இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் போய் கேட்டால் ,வீட்டை உயர்த்தி கட்டிக்கொள்ளுங்கள், இல்லையென்றால் இந்த இடத்தைக் காலி செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளிப்பாதாகக்  தெரிவித்தார்.
வளர்ந்து வரும் கோவை நகருக்கான உள்கட்டமைப்புகளில் மழைநீர் வடிகால் முக்கியமானவை தான். அதே நேரத்தில், அவற்றை பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே கட்டிக்கொடுக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. மாறாக, மக்களை தரை மட்டத்திற்கு கீழ் இறக்கி வாழச்சொல்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை சீர்குலைக்கும் செயல் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்..
பழைய தார் சாலையை பெயர்த்தெடுக்காமல் அதன் மேலே புதிதாக தார் சாலை போடப்படுவதால்,அதற்கு ஏற்றார் போல மழை நீர் வடிகால் அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டும் அவர்கள், பல ஆண்டுகளாக இங்கு பட்டா கேட்டும் ,குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கேட்டும்  போராடி வரும் தங்களைக் ,ஏதுதராமல் இது போன்ற நெறுக்கடிகளைக் கொடுத்து தாங்களாகவே, இந்த  நகரபகுதியில் இருந்து விரட்டும் முயற்சியைக் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருவதாகவும்  குற்றம்சாட்டுகின்றனர்.
சுமார் நான்கு தலைமுறைகளாக வசித்து வருபவர்கள் மட்டுமல்லாமல் தற்போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் வசிக்க, தற்போது வீட்டை காலி செய்து வேறு  இடங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக  சிலர்  கண்ணீருடன் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: