புதுதில்லி, ஜூலை 11-

அங்கன்வாடி ஊழியர்கள், தங்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிக்கக் கோரியும், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமையன்று அகில இந்திய கோரிக்கை நாள் அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு முழுதும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள்.

அங்கன்வாடி மையங்களுக்கு சமைத்த உணவு கொண்டுவருவதை நிறுத்து, அங்கன்வாடி மையங்களுக்குப் பதிலாக நர்சரிப் பள்ளிகள் அறிமுகப்படுத்துவதை நிறுத்து, ஐசிடிஎஸ் மையங்களுக்கு அளித்துவந்த மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை 60 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வெட்டிச்சுருக்காதே, அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து, குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடு முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, உட்பட 22 மாநிலங்களிலும் அங்கன்வாடி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமையன்று கோரிக்கை தினம் அனுசரித்தார்கள். மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள். மேலும் நாடு முழுதும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கோடி பேர்களிடம் கையெழுத்து பெற்று, பிரதமருக்கு அனுப்பிட இருக்கிறார்கள்.

ஒடிசா மாநிலத்தில் திங்கள் அன்று பேரணி நடத்தினார்கள். தில்லியில் மட்டும் வரும் ஜூலை 20 அன்று பேரணி நடைபெறவுள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 9 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கமும், சிஐடியும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் ‘சிறைநிரப்பும் போராட்டத்திலும்‘ தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்ததாக, வரும் ஆகஸ்ட் 14 அன்று “ஊட்டச்சத்துக் குறைவு. எழுத்தறிவின்மை, சுகாதாரமின்மை முதலானவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம்”, என்னும் இயக்கத்திலும் தங்களை முழுமையைக இணைத்துக்கொள்கிறார்கள். மேலும் வரும் செப்டம்பர் 5 அன்று தில்லியில் நடைபெறவுள்ள தொழிலாளர் – விவசாயிகள் பேரணிக்கு, அங்கன்வாடி ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்றிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இத்தகவல்களை அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்மேளனம் பொதுச் செயலாளர் ஏ.ஆர். சிந்து தெரிவித்துள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.