சென்னை,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு துவக்க விழா மற்றும் கண் விபத்து சிகிச்சை கருத்தரங்கம் அமைச்சர் தலைமையில் புதனன்று நடந்தது.இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:- தொன்மையான மருத்துவமனைகளில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலும் உலக அளவில் 2-வது இடத்திலும் உள்ளது. முதன் முதலில் 1891-ல் சிறிய மருத்துவமனையாக சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1844-ம் ஆண்டு முதல் எழும்பூருக்கு மாற்றப்பட்டது. டாக்டர் கிரிக் பேட்ரிக் என்பவரால் மெட்ராஸ் ஐ எனும் நோய் இந்த மருத்துவமனையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5.12 கோடி மதிப்பில் 32 மாவட்டங்களில் உயர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன உபகரணங்கள் வழங்கி சர்க்கரை நோய் பாதிப்புகள் பரிசோதிக்கப்படும். ரூ.5 கோடி மதிப்பில் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவமனை பிரிவுகள் நவீனப்படுத்தப்படும். ரூ.3.25 கோடி மதிப்பில் கீழ்ப்பாக்கம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண் சிகிச்சை பிரிவுகளுக்கு அதிநவீனக் கருவிகள் வழங்கப்படும். ரூ.1.64 கோடி மதிப்பில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கென தனிப்பிரிவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.