கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுத்தமான கழிவறை, சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், சுகாதாரமான காற்றோட்டம் உள்ள வகுப்பறைகள், இவைகளோடு கணினி முறையில் புதுமையாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் தனியார் பள்ளியை விட மிக சிறப்பாக உள்ளதால் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் தலைமை ஆசிரியர் ப.திரிபுரசுந்தரியின் சிறந்த நிர்வாக திறனால் இந்த பள்ளிக்கு புதுமைப் பள்ளி விருதும், பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். தமிழக அரசு விருது வழங்கியதை தொடர்ந்து பள்ளியின் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கைத்தறி துண்டு அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கல்விக்குழு நிர்வாகிகள் கே.இ.திருமலை, சீனிவாசன், பிரபாகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.