திருப்பூர்,
ஆட்சியர் உத்தரவை மீறி மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தமாக கடையை மூடக்கோரியும் பிச்சம்பாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக பிச்சம்பாளையம் பகுதி பொதுமக்கள் புதனன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பழனிச்சாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; எங்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இப்பகுதியில் கோவில், பள்ளிக்கூடங்கள், உழவர் சந்தை மற்றும் பேருந்து நிலையம் உள்ளது. இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும். இந்நிலையில், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தை செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, கடந்த ஜூலை 2 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். அப்போது மேற்குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

இந்நிலையில், செவ்வாயன்று மாலை ஆட்சியரின் உறுதிமொழியையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதனையறிந்த பெண்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுக்கடையை மூடினர். இருப்பினும் மீண்டும் மதுக்கடையை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையீடுசெய்து நிரந்தரமாக டாஸ்மாக் மதுக்கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.