கோவை,
அமைச்சர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் ஊதிய மாற்றக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் மற்றும் அதிகாரிகளுக்கு 3 ஆவது ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல் ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கான ஓய்வூதிய மாற்றம், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அமைச்சர் அளித்த உறுதிமொழியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத்தலைவர் வி.சசிதரன் தலைமை வகித்தார். இதில் பிரபாகரன், அன்பரசு, பிரிட்டோ அலெக்ஸ்சாண்டர், தங்கமணி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திருப்பூர், உடுமலை, பல்லடம் தொலைப்பேசி நிலையங்கள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.