தருமபுரி மாவட்டம், இண்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 15ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளியில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். அதனால் கூடுதலான பள்ளிக் கட்டடமும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறையும் கட்டப்பட்டது. தனியார் பள்ளிகள் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பணம் கட்டி படிக்க வைக்கத் தொடங்கினர். இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் பள்ளி பாதியாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மின்சார வாரியம் செயல்படும் பகுதியில் கம்பி வேலியும் பள்ளியின் முன் பகுதியில் செங்கல்லால் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளியின் வலது புறம் உள்ள சுற்றுச்சுவருக்கும் இடது புறம் உள்ள சுற்றுச்சுவருக்கும் இடையில் நுழைவு வாயில் உள்ளது. வலதுபுறம் உள்ள சுற்றுச் சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் அங்கு மது அருந்திவிட்டு பள்ளி மைதானத்துக்குள்ளும், வகுப்பறையின் முன்பும் மதுபாட்டில்களையும், பிளாஷ்டிக் டம்ளர்களையும் வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். இப்பள்ளியின் கட்டிடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீர் கொட்டுகிறது மேலும் மேற்கூறை பெயர்ந்து மாணவர்கள் மீது விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பயத்துடனேயே வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார்கள்.பள்ளியில் உள்ள கழிப்பறையை, தமிழ்நாடு மின்சார வாரியம் தளவாட பொருட்கள் வைத்து பாதுகாக்கும் குடோனாகப் பயன்படுத்துகின்றனர்.  எனவே மாணவர்களின் எதிர்கால கல்வியை கருத்தில் கொண்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– லெனின்

Leave a Reply

You must be logged in to post a comment.