===ரமணன்===
இலங்கைக் கடற் பரப்பில் வாழும் நீலத் திமிங்கலங்கள் மற்ற திமிங்கலங்களிளிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இவற்றின் வாழ்க்கை நடவடிக்கைகள் கட்டுடைக்கும் கதாசிரியர்கள், கவிஞர்கள் போன்றவை. மற்ற திமிங்கலங்கள் உணவிற்காக குளிர் பரப்பிற்கும் இனப்பெருக்கத்திற்காக வெப்பப் பரப்பிற்கும் வலசை செல்லும்.ஆனால் இவை மிகவும் வெப்பமான இலங்கைக் கடற்பரப்பிலேயே உணவையும் தேடிக்கொள்கின்றன. நீளத்தில் சிறியனவாக இருப்பதால் பிக்மி நீலத் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எழுப்பும் ஓசையும் வித்தியாசமானது. அவைகளுக்கு மரணத்தை தரும் அதிகமான கப்பல் போக்குவரத்து உள்ள இந்த இடத்தில் ஏன் அவை வாழுகின்றன?அவைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் இருக்கலாம்.

திமிங்கலங்களுக்காக மட்டுமா?
கடல் பாலூட்டிகள் துறையில் இலங்கை நாட்டின் முதல் முனைவரான ஆஷா டி வோஸ்(Asha de Vos) இவை பற்றி மேலும் பல தகவல்களை கூறுகிறார்.மனித நடவடிக்கைகளினால் அருகி வரும் திமிங்கலங்கள் நமக்கு ஏன் முக்கியமானவை?கடலினடிக்கு சென்று இரைகளைத் தின்று பின் மேல் மட்டத்திற்கு வந்து மூச்சு விடும் போது அவை ஏராளமான கழிவுகளை வெளிவிடுகின்றன. இக்கழிவுகளே பைடோ பிளாங்டான்(phytoplankton) எனும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. கடல்உணவு வளையத்தில் இவைகளே அடிப்படை. மேலும்திமிங்கலங்கள் தாங்கள் வலசை செல்லுமிடங்களிலெல்லாம் இந்தக் கழிவுகளை பரப்புகின்றன. அவைகள் இறந்த பின்னும் கடலினடியில் இருக்கும் நானூறுக்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கு அவற்றின் உடல் உணவாகின்றன.கரிமங்களை இழுத்துக்கொள்ளும் தொட்டியாகவும் மாறி புவி வெப்பமாவதையும் தாமதப்படுத்துகின்றன. எனவே திமிங்கலங்களைக் காப்பது அவற்றிற்காக மட்டுமல்ல நமக்காகவும்தான்.

கடல் ஒரு பெரும் நீலத் தொட்டி மட்டுமா?
இத் திமிங்கலங்களைப்போலவே ஆஷா டி வோஸ்சும் வழமை மீறியவர்தான்.அவர் ஏன் இத்துறைக்கு வந்தார்? குறிப்பான காரணம் ஏதும் இல்லை.சிறு வயதிலிருந்தே அவர் நீச்சலில் ஆர்வம் உடையவர். அவருடைய பெற்றோர்கள் அவருடைய விருப்பப்படி எதை வேண்டுமானாலும் படிக்க அனுமதித்தார்கள். மருத்துவராகவும், பொறியியலாளராகவும், வழக்கறிஞராகவுமே படிக்க ஆர்வம் கொள்ளும் இலங்கையில் இவருடைய பெற்றோர்கள் வாங்கித் தந்த national geography பழைய புத்தங்கங்கள் இவருடைய ஆர்வத்தைத் தூண்டின.இலங்கை ஒரு தீவு. ஆனால் அதில் எவருமே கடல் உயிரியலில் நாட்டம் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமே.ஆர்தர் சி கிளார்க்(Arthur C. Clarke)என்ற அறிவியல் புனைகதை எழுத்தாளரும் ஒரு காரணம். அவருடைய கடல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதால் இவருக்கும் தானும் அதுபோல கடல் ஆய்வாளராக வேண்டுமென்று விருப்பம் ஏற்பட்டதாம்.எல்லோரும் கடலைஒரு பெரும் நீலத் தொட்டியாகமட்டுமே பார்த்தபோது இவர் அதனுள் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

சிம்புட் பறவையே சிறகை விரி
ஸ்காட்லாந்து நாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்தபின் அவரிடம் பணம் ஏதும் இல்லை. ஆகவே உருளைக்கிழங்குத் தோட்டத்தில் வேலை செய்து பணம் சேர்த்தார். நியூஸ்லாந்து நாட்டில் கூடாரங்களில் தங்கி சுற்றுச்சூழல் திட்டங்களில் ஈடுபட்டார். இலங்கை செல்லும் ஒரு ஆய்வுக் கப்பலில் சேர்வதற்காக விடாமல் அவர்களுடன் தொடர்பு கொண்டு அதில் உறுப்பினர் ஆனார். அவருடைய ஈடுபாட்டைக் கண்டு அவர் இலங்கையில் தங்கி ஆய்வு செய்ய அனுமதித்தனர். இப்பொழுது pew உதவித் தொகை மூலம் இலங்கையில் முதல் கடல் கல்வி மற்றும் ஆய்வு மையத்தை ஏற்படுத்தமுனைந்துள்ளார்.நாம் அனைவரும் சிறு கூட்டிற்குள் அடைத்துக்கொள்ளக்கூடாது.சுதந்திரமாகக் கனவு காணவேண்டும் என்கிறார்.

அறிவியலுக்கு கலை
அறிவியலைஎளிதாகப்பரப்ப கலைஞர்கள் உதவ முடியும்.அறிவியலாளர்கள் உரையாற்றுவதிலும் வெளியிடுவதிலுமே முனைப்பாக இருப்பார்கள்.எனவே படைப்பாக்கத்துடன் கூடிய கலையின் மூலம் அறிவியலை எல்லோருக்கும் கொண்டு செல்ல முடியும்.தான் ஒரு கலைஞன் இல்லை என்றாலும் கலைஞர்கள் நிறைந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்ததால் தன்னால் அதன் சக்தியை புரிந்துகொள்ளமுடிகிறது என்கிறார்.

தகவல் திரட்ட உதவியவை
Post by: Karen Frances Eng October 6, 2014 at 7:55 pm EDT
Post by: Karen Frances Eng January 11, 2013 at 4:24 pm EDT
nat geo society-2016

Leave a Reply

You must be logged in to post a comment.