மே.பாளையம்,
பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்தி பணிக்காக வினாடிக்கு ஆறாயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து உயர்ந்தபடி உள்ளது. தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு மூவாயிரம் கனஅடியாக இருப்பதால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது அதன் நீர் மட்ட உயரம் 92 அடியாகஉயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பில்லூர் அணைக்கான நீர்வரத்து இதே போல் நீடித்தால் ஓரிரு நாட்களில் ஆணை நிரம்பும் என எதிர்பார்கப்படுகிறது. இதற்கிடையே பில்லூர் அணையின் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. பில்லூர் அணையில் இருந்து நூறு மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் தற்போது வினாடிக்கு ஆறாயிரம் கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பவானியாற்றில் இறங்கி நீந்துவது, குளிப்பது போன்ற நடவடிக்கைளில் யாரும் ஈடுபட வேண்டாம் என உள்ளூர் நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் நேரத்திற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பாகவே நகரில் உள்ள எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டு வந்தாலும் இதனை வெளியூரில் இருந்து வரும் பலரும்அபாய அறிவிப்பு என புரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இருதினங்களுக்கு முன்பு இதுபோன்ற வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு குறித்து அறியாமல் வெளியூரில் இருந்து சுற்றுலா வந்து ஆற்றில் இறங்கி உயிருக்கு
ஆபத்தான நிலையில் மறுகரையில் சிக்கித்தவித்த கல்லூரி மாணவர்கள் 11 பேரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.