நாகர்கோவில்:
நூறுநாள் வேலைத் திட்டத்தை முடக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கொட்டும் மழையிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மத்தியில் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இடதுசாரி கட்சிகளின் கடும் நிர்ப்பந்தத்தால் ஊரக வேலை உறுதி திட்டம் நாடுமுழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் அமல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின்மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், கடந்த 2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, இந்த திட்டத்தை முடக்கும் நோக்கில் திட்டத்திற்கான நிதியை வெட்டிக்குறைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற நூறு நாள் வேலைத்திட்டத்திற்காக வழங்கிய நிதியில் 600 கோடி ரூபாயை 110 விதியின்கீழ் பிற வேலைகளுக்கு மாற்றம் செய்ய முயற்சித்து வருகிறது. மேலும், நூறு நாள் வேலைதிட்டத்தின்கீழ் வேலை அட்டை வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாத காலமாக எந்த வேலையும் வழங்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தை முடக்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்த பல தொழிலாளர்களுக்கு கடந்த ஒன்றரை வருட காலமாக சம்பள பாக்கியை வழங்காமல் அரசும் அதிகாரிகளும் இழுத்தடித்து வருகின்றனர். 

குமரி மாவட்டத்தில் உள்ள 94 கிராம பஞ்சாயத்துகளில் வேலை அட்டை வழங்கப்பட்ட சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உடனடியாக நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அட்டை வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை அட்டை வழங்கி அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கவேண்டும். மத்திய – மாநில அரசுகள் நூறு நாள் வேலை திட்டத்தை முடக்காமல் போதுமான நிதியை ஒதுக்கி இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமையன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டத்தலைவர் என்.எஸ்.கண்ணன், பொருளாளர் எம்.கிறிசாந்து மேரி, துணைத்தலைவர்கள் எம்.சாகுல் ஹமீது, கே.சிவானந்தம், எச்.ராஜதாஸ், துணைச்செயலாளர்கள் ஸ்ரீகுமார், ராஜேந்திரன், முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி, துணை தலைவர் என்.முருகேசன் உள்ளிட்ட தலைவர்களும் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனுக்களுடன் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முழக்கமிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தால்தான் கலைந்து செல்வோம் என கூறினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்குழு தலைவர்களை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அதிகாரிகள் ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு கையொப்பமிட்டு, வேலை அட்டை வழங்காதவர்களுக்கு வேலை அட்டை வழங்கவும், அனைவருக்கும் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.