ஹைதராபாத்;
மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார் என்று கூறி, தெலுங்கு நடிகர் மகேஷ் காதி, தெலுங்கானா மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.சங்-பரிவாரத்தைச் சேர்ந்த மதவெறி அமைப்புகளின் மிரட்டலுக்குப் பயந்து, இந்த நடவடிக்கையை எடுத்துள்ள சந்திர சேகரராவ் அரசு, மகேஷ் காதி 6 மாதங்களுக்கு தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழையக் கூடாது என்று தடையும் விதித்துள்ளது.தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர், நடிகர் மகேஷ் காதி. பகுத்தறிவாளரான மகேஷ், குறும்பட தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர். தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களிலும் பங்கேற்று வருபவர்.

அந்த வகையில், அண்மையில் நடைப்பெற்ற டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் இராமாயண கதாபாத்திரங்கள் குறித்த தனது கருத்தை முன்வைத்து மகேஷ் பேசினார். ‘என்னைப் பொறுத்தவரை இராமாயணம் வெறும் கதைதான்; அந்த கதையைப் படிக்கும்போது, ராமர் மிகப்பெரிய மோசடிக்காரர் என்றே எனக்குத் தோன்றியது’ என்று கூறியதுடன், ‘ராமருடன் திரும்பி வராமல், ராவணனுடனேயே சீதை வாழ்ந்திருந்தால் அவருக்கு நியாயம் கிடைத்திருக்கும்; மேலும் அவ்வாறு வாழ்வதில் என்ன தவறு?’ என்றும் அப்போது மகேஷ் கேட்டிருந்தார்.

எதிர்பார்த்ததைப் போலவே, மகேஷ் காதியின் இந்த பேச்சுக்காக பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்-பரிவார அமைப்பினர் தாவிக் குதித்தனர். மகேஷ் காதியை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் புகாரும் அளித்ததுடன், நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும் என்று பயமுறுத்தினர். அச்சமடைந்த ஹைதராபாத் போலீசார், மகேஷ் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.ஆனால், மகேஷை கைது செய்தால்தான் விடுவோம் என்று கூறிய ஸ்ரீபீடம் பீடாதிபதி பரிபூரிணானந்தா இதற்காக, ஆன்மீக யாத்திரை நடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுக்கவே, மகேஷ் காதியை தெலுங்கானாவிலிருந்து வெளியேற்றி சந்திரசேகர ராவ் அரசு, அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. மகேஷ் காதி 6 மாதங்களுக்கு தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழையக் கூடாது என்று தெலுங்கானா டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி மூலம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.
தானொரு தலித் என்பதால், சங்-பரிவாரங்கள் தனக்கு எதிராக பிரச்சனையை பெரிதாக்கி மிரட்டப் பார்க்கின்றன என்று மகேஷ் காதி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.