பேராசிரியர் கே. ராஜு
தில்லியின் தென்பகுதியிலுள்ள சுமார் 15000 மரங்களை வெட்டித் தள்ளுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதை எதிர்த்து மாநகர மக்கள் கடந்த சில நாட்களாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தெற்கு தில்லியின் அரை டஜன் குடியிருப்புகளை விரிவுபடுத்தி சீரமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ள தேசிய கட்டடங்கள் கட்டுமான மாநகராட்சி இந்த மரங்களை வெட்டும் முடிவை எடுத்திருக்கிறது. மாநகராட்சி வெட்டுவதாக இருக்கும் மரங்களில் பல முதிர்ந்தவை, பழங்களை அள்ளித் தருபவைதான். இவைதான் தில்லிவாழ் மக்களுக்கு சுத்தமான காற்று, நிழல், நிலத்தடி நீர் சேமிப்பு ஆகியவற்றைத் தந்து வருபவை. பறவைகளுக்கு வீடுகளாக அமைந்து அடைக்கலம் கொடுத்து வருபவை. மாநகரின் `நுரையீரலாக’ செயல்பட்டு வருபவை. ஆனால், கட்டுமானத் திட்ட அறிக்கைகள் இந்த அம்சங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

பணம் படைத்த, செல்வாக்கு மிகுந்த ஒப்பந்தக்காரர்களோடு தொடர்புடைய இத்திட்டங்கள், வீடுகள் மற்றும் மாநகர விவகாரங்களின் மத்திய அமைச்சரகத்தால் வடிவமைக்கப்பட்டவை. 2017 செப்டம்பரில் மத்திய அமைச்சரவை இவற்றுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. மிக அதிகமான தண்ணீர் செலவு, மரங்கள் இழப்பு ஆகிய சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிக்கக்கூடிய இத்திட்டங்கள், அரசைப் பொறுத்தவரை “அதிக திறன் உள்ள, பசுமைத் திட்டங்கள்” ஆக மாறி விடுகின்றன.

இந்தியாவில் பெரிய கட்டுமான நிறுவனங்களை சமாளிப்பது கடினமாகவே உள்ளது. நாட்டின் சுற்றுச்சூழல் விதிமுறைகளிலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கு தங்கள் செல்வாக்கினையும் பணபலத்தையும் பயன்படுத்துவது வழக்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. அதில் அவை பெரும்பாலும் வெற்றியும் பெற்றுவிடுகின்றன. 2006-ம் ஆண்டிலிருந்து, பெரும்பாலான கட்டுமானத் திட்டங்கள் அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் அல்லாமல் நிறுவனங்களின் விண்ணப்பப் படிவங்களின் அடிப்படையில் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுவிடுகின்றன. 2014-ம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கான விடுதிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் 20,000 சதுர மீட்டருக்குக் குறைவான பரப்பளவு கொண்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதாக அந்த நிறுவனங்கள் தங்களுக்குத் தாங்களே ( நாங்க எல்லாத்தையும் சரியாத்தான் செய்துக்கிட்டிருக்கோம்னு ) ஒரு சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது! இத்தகைய விசேஷ சலுகைகளின் விளைவாக, கட்டுமானத் திட்டங்கள் மாநகர காற்று மண்டல மாசு, அதிக சத்தத்தினால் வரும் கேடுகள், அளவுக்கதிகமான தண்ணீர் நுகர்வு ஆகிய கேடுகளை சர்வசுதந்திரமாக ஏற்படுத்தி வருகின்றன. அரசின் அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளும் பெரிய நிறுவனங்களை செல்லக் குட்டு குட்டி அரவணைத்துக் கொள்வது கண்கூடு.

மரங்கள் வெட்டப்படுவதை எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்த மரங்களுக்கு ஈடாக செடிகளை நட்டு விடுவோம் என்ற மாற்றுத் திட்டமும் பொதுவாக தோல்வியிலேயே முடிகிறது. காரணம், அப்படி நடப்படும் கன்றுகள் நீடித்து நிற்பதில்லை. அப்படி நிற்கின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் யாருமில்லை. தற்போது ஏற்படும் இழப்புகளை பின்னர் 20,30 ஆண்டுகள் கழித்து ஈடுகட்டிவிடுவோம் என்ற வாதமே வினோதமானது.

மாநகர வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் மரங்கள் வெட்டப்படுவதற்கெதிரான பிரச்சாரம் “தவறான புரிதலின்” அடிப்படையில் நடைபெறுவதாகக் கூறுகிறார். சரியாகச் சொன்னால், உண்மைக்கும் இவரது அறிக்கைக்கும்தான் தூரம் அதிகம். மாநகரக் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் வழக்கம் இருப்பதில்லை. இத்திட்டங்கள் பற்றிக் கூறுவதற்கு மக்களிடம் எந்தக் கருத்தும் இல்லை என்று அரசு தன்னிச்சையாக முடிவு செய்து கொள்கிறது. தில்லியை ஆள்பது பல்வேறு அதிகார மையங்கள் என்பதால் நீங்கள் அங்குமிங்கும் ஓடி அலைந்தாலும் யார் எந்தத் துறைக்குப் பொறுப்பு என்பதை அறிந்து கொண்டுவிட முடியாது.

மாநகரத்தின் மறுசீரமைப்பு தங்கள் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கட்டும் என்ற மிக எளிமையான கோரிக்கையை வைக்கிறார்கள் தில்லிவாழ் மக்கள். அரசு செவிகொடுத்துக் கேட்க வேண்டாமா?
உதவிய கட்டுரை : 2018 ஜூன் 27, ஆங்கில இந்து நாளிதழில் மஞ்சு மேனன், காஞ்சி கோஹ்லி ஆகியோர் எழுதியது

Leave a Reply

You must be logged in to post a comment.