படப்பை,
சேலம் – சென்னை இடையே 8 வழிச் சாலை அமைக்க திட்டத்திற்கு ஏழ்மையை பயன்படுத்தி கிராம மக்களின் வீடுகள், நிலங்களை அரசு பறிப்பதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

இத்திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடியில் சுமார் 277 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னை வரை செல்கிறது. இதற்காக இம்மாவட்டத்தில் 59.1 கி.மீ தூரம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் திருப்பெரும்புதூர், செங்கல்பட்டு உத்திரமேரூர் ஆகிய வட்டங்களில் 42 கிராமங்களில் சுமார் 1300 ஏக்கர் அளவிற்கு அரசு மற்றும் தனியார் நிலங்கள் கையகப்படுத்தவுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் துண்டல்கழனி பகுதியில் இருந்து தொடங்கும் இந்த சாலை, படப்பை, கொடுங்கதாங்கல், ஆதனூர், ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வளையங் கரணை வடக்குப்பட்டு ஆகிய கிராமங்கள் வழியாக 18 கி.மீ செல்கிறது. இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட நில அளவீடு செய்யும் பணி செவ்வாயன்று தொடங்கியது. காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ மற்றும் திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரண்டு குழுவாக பிரிந்து அளவீடும் பணியை மேற்கொண்டனர். ஒவ்வொரு குழுவின் கீழும் மூன்று குழுக்கள் இயங்கின. ஜி.பி.எஸ் கருவி மற்றும் சிறிய விமான கேமரா மூலம் அளவீடு பணி நடைபெற்று கல் நடப்பட்டது. நில அளவீடு செய்யும் இடங்கள் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினர் நிலங்களை அளந்து முடித்தனர். இந்த பணியில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 320 பேர் அளவீடு பணியில் ஈடுபட்டனர்.

வீட்டுக்கு வெள்ளையடிக்ககூட பணம் இல்லை:
வளையங்கரணை பகுதியைச் சேர்ந்த விஜயா கூறும்போது, மேய்க்கால் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகிறோம். வீட்டுக்கு வெள்ளை அடிக்கக் கூட பணம் இல்லாததால் அப்படியே வசித்து வருகிறோம். 2.கி.மீ தூரம் தலையில் தண்ணீர் சுமந்து வந்து வீடுகட்டினோம். இப்போது திடீரென அதிகாரிகள் இடிக்க வந்துள்ளனர். நான் 3 பேரக்குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கையை நடத்துவதென்றே தெரியவில்லை என்று நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளின் காலைக் கட்டிக் கொண்டு கதறி அழுதார். நாட்டரசன்பட்டு கிராமத்தில் பட்டா இடங்களைப் பார்த்து குறிவைத்து நிலம் எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எட்டு வழிச்சாலைக்காக இடம் கையகப்படுத்தும்போது அருகில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கும் போது அதைவிட்டுவிட்டு பட்டா இடங்களையே குறிவைக்கின்றனர்.அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டால் எங்களுக்கும் பாதிப் பில்லை, அரசும் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை. அப்படி இருக்கும்போது பட்டா நிலங்களை ஏன் குறிவைக்கிறீர்கள் என்று நில அளவை செய்யும் பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு நில அளவையாளர் கள் சாட்டிலைட் மூலம் எங்களுக்கு கொடுக்கப்பட்ட சர்வே எண்களின் படி அளவீடு செய்கிறோம். அதனால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 59.1 கி.மீ தொலைவுக்கு பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள 18 கி.மீ தூரத்தில் 15 வரையிலான நிலத்தை அளவீடு செய்துள்ளதாகவும், மீதமுள்ள இடம் வனத் துறைக்குள்பட்ட காப்புக் காடு என்பதால் எப்போது வேண்டுமானாலும் அளவீடு செய்து கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிலம் அளவீடு செய்யும் பணியின்போது பொதுமக்கள் எதிர்ப்பு வந்தால் சமாளிக்கும் வகையில் ஏராளமான காவலர்கள் லத்தியுடன், பாதுகாப்புக் கவசங்களுடன் குவிக்கப்பட்டிருந்தனர். தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து புதனன்று (ஜூலை 11) செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம் பாக்கம், சீத்தணஞ்சேரி ஆகிய 5 கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறும். வியாழனன்று உத்திரமேரூர் வட்டத்தில் மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர், உள்ளிட்ட பகுதிகளிலும் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: