சேலம்,
பசுமைச்சாலை திட்டத்தை நிறைவேற்றும் வகையில் சேலத்தில் செவ்வாயன்று அரசால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் முதல் சென்னை வரை பசுமைச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நில அளவீடுபணிகள் முதல்கட்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் எவ்வித கருத்துக்கும் கேட்காமல் நில அளவீடு பணியும், கையகப்படுத்தும் பணியும் நடத்தப்படுவதை கண்டித்து பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் காவல்துறையினரின் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நில அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அளவீடு பணி முடிந்தது. தற்பொழுது வருவாய் அலுவலர்கள் விவசாயிகளின் நிலம், வீடு மற்றும் மரம் தொடர்பான கணக்கெடுப்புபணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதற்கிடையே கணக்கெடுப்பு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல்கட்ட கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் 269 விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வந்திருந்தனர்.

ஆனால் விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையிலேயே அதிகாரிகள் மும்முரம் காட்டியதால் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினை சேர்ந்தவர்கள் விவசாயிகளை மிரட்டும் வகையில் பேசியதால் அதிர்ச்சியடைந்தவிவசாயிகள் தங்களது கடும்எதிர்ப்பை பதிவு செய்து கூட்டத்தில் இருந்த வெளியேறினர். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக அச்சாங்குட்டப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், மாசி நாயக்கன்பட்டி, அயோத்திப்பட்டினம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த 200க்கும்மேற்பட்டோர் நிலம் கையகப்படுத்த ஆட்சேபணை தெரிவித்து மனு அளித்தனர். அவர்கள் நேரில்வந்து தங்களின் பாதிப்புகள் குறித்தும், தேவைகள் குறித்தும் மாவட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் முன்னிலையில் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அயோத்
தியாபட்டணம் பகுதியில் இரண்டாவது நாளாக செவ்வாயன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதையொட்டி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இதன்பின் வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தங்களுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். மேலும் அதே பகுதியில் மாற்று இடங்கள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், இதுதொடர்பாக எவ்வித உறுதியும் அளிக்காத அதிகாரிகள், எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாகவே மீண்டும், மீண்டும் விவசாயிகளுக்கு நிர்பந்தம் கொடுத்தனர். இதனால் பெரும்அதிருப்தியடைந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அதிகாரிகளை கண்டித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

Leave A Reply

%d bloggers like this: