உத்திரமேரூர்,
சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை அமையவிருக்கும் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலை சென்னையில் இருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங் கள் வழியாக சேலத்துக்கு 277 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத் தில் இந்தச் சாலை சுமார் 59.1 கி.மீ தூரம் அமைய உள்ளது. விளைநிலங்களை அழித்து சாலை அமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள அனுமந்தண்டலம், ஐசூர், இளநகர், மேலபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் வீடுகளை இழக்கும் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் ஜெயந்தி மற்றும் உத்திரமேரூர் வட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி கூறுகையில், நான்கைந்து கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்படும் கிராம மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டோம். குறிப்பாக அனுமந்தண்டலம் கிராமத்தில் 600 மீட்டருக்குள் 13 செழிப்பான விவசாய கிணறுகள் நில எடுப்புபகுதிக்குள் வருகிறது. இந்தப்பகுதி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதி. இதற்கு நடுவில் சாலை அமைத்தால் கிராமம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. சுடுகாட்டிற்குச் செல்ல முடியாது, ஆடுமாடுகளை மேய்க்க முடியாது. இருக்கும் கால்வாசி நிலத்தையும் எங்களிடம் இருந்து அரசு வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பார்க்கிறது. இந்த நிலத்தையும் இழந்து விட்டால் எப்படி உயிர்வாழ்வது, எப்படிச் சாப்பிடுவது எனக் கண்ணீருடன் கேள்விகளை முன்வைத்தனர். மேலும் சிலரை மிரட்டி பணியவைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது. “ எங்கள் நிலத்தைப் பாதுகாக்க அளவீடு செய்ய விடமாட்டோம் கண்டிப்பாக எதிர்ப்போம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர். மிகவும் பசுமையான பகுதியாக உள்ள உத்திரமேருர் பகுதியை அழித்துவிட்டு 8வழிச்சாலையை அமைப்பதை எப்படி ஜீரணிக்கமுடியும் என்றும் அவர்கள் கேட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: