சென்னை,

அமித்ஷாவின் பேச்சு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழகத்தில் நேற்று தன் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, தமிழகத்திற்கு ரூ. 5,10,000 கோடி அள்ளிக் கொடுத்ததாக, உண்மைக்கு மாறான தகவலை சொல்லி சென்றிருக்கிறார். 13வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தமிழகத்திற்கு போதுமானதல்ல என்பது உண்மை. ஆனால், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதலாக கொடுத்து விட்டு, அது ஒரு இமாலய சாதனை என்பது போல பேசியிருக்கிறார். 15வது திட்டக்குழுவிற்கான வரையறையில் இப்போது வரிவருவாயில் மாநிலங்களுக்கு இருக்கும் பங்கை 42 சதவிகிதத்திலிருந்து குறைக்க வேண்டுமென்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதே போன்று தென்மாநிலங்களையும், வளர்ச்சியடைந்த மாநிலங்களையும் பாதிக்கும் வகையில் 1971ம் ஆண்டு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படைக்கு பதிலாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி பங்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இதனால் எல்லாம் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இதேபோன்று பொதுவிநியோக முறையில் 18 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு மட்டுமே தற்போது மானிய விலை சர்க்கரையும்,
மண்ணெண்ணையும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தலித்  மாணவர்களுக்கான +2-விற்கு பிந்தைய கல்வி உதவித் தொகையை மத்திய
அரசு கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1,900 கோடி ரூபாய் பாக்கியிருக்கிறது. தமிழக அரசு மிகக் கடுமையான கடன் சுமையில் சிக்கியிருக்கும் நிலையில் உரிய உதவிகளைச் செய்வதற்கு
பதிலாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் பாஜகவின்
தலைவர் திரு. அமித்ஷா தமிழக மக்களை வஞ்சித்தது அல்லாமல் வாரி
வழங்கியது போன்று பேசியிருப்பது மிகப்பெரிய மோசடியாகும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதோடு, படோடோபமாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்காமல், எப்போது முடியும் என்றும் தெரிவிக்காமல் மத்திய அரசை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம் போல தேர்தலுக்காக அள்ளி விடும் வெற்று அலங்காரப் பேச்சு என்பதையும் தாண்டி அமித்ஷாவின் பேச்சு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: