மே.பாளையம்,
மறக்கப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை இன்றைய இளையதலைமுறைகளிடம் கொண்டு செல்லும் வகையில் மேட்டுப்பாளையத்தில் தனியார் மழலையர் பள்ளி சார்பில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல் கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விஷயங்களை புறம்தள்ளி வருகிறோம். இதில் குறிப்பிடத்தக்கது நம் உடல் மற்றும் அறிவுத்திறனை ஒரு சேர செழுமைப்படுத்தும் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. இதில்நினைவாற்றலை அதிகரித்து கொடுத்து, வாங்கும் பண்பை வலியுறுத்தும் பல்லாங்குழியாட்டம், எத்தனை முறை தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சித்து வெற்றி பெற ஊக்குவிக்கும் பரமபத விளையாட்டு, கவன சிதறலை நேர்படுத்தும் சொட்டாங்கல், மனம் மற்றும் உடல் வலிமைக்கான சிலம்பாட்டம் என அனைத்துவிளையாட்டுக்களும் மறைந்து போய், இன்றைய குழந்தைகள் செல்போன் விளையாட்டுகளில் விட்டினுள் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதால் அவர்களது உடல் நலம் மட்டுமின்றி மன நலமும் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு இன்றைய பள்ளி பருவ மாணவ, மாணவிகளிடம் மறைந்து வரும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மழலையர் பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இச்சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நம் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். மேலும், இந்த விளையாட்டுக்களை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு இவ்விளையாட்டுக்களை விளையாடுவது எப்படி என்பது குறித்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: