புதுதில்லி;
பணமதிப்பு நீக்கத்தையொட்டி, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட மட்டும் ரூ. 7 ஆயிரத்து 965 கோடி செலவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவ்வாறு அச்சிடப்பட்ட பணத்தை விமானங்களில் கொண்டு சேர்ப்பதற்கான கட்டணமாக மட்டும் ரூ. 29 கோடியே 41 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுதற்கான செலவு குறித்து, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில் அளித்துள்ளது. அதில், ‘2016-ஆம் ஆண்டில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ. 7 ஆயிரத்து 965 கோடி செலவிடப்பட்டு உள்ளது; இது 2015-ஆம் ஆண்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவை விட இரண்டு மடங்கு அதிகம்’ என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, ‘2015-இல் ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கு ரூ. 3 ஆயிரத்து 421 கோடி மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், பண மதிப்பு நீக்கமானது, ரூபாய் நோட்டு அச்சடிப்பு கட்டணத்தையும் 2 மடங்காக அதிகரிக்கச் செய்து விட்டது’ என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு இருந்ததால் அச்சடிக்கப்பட்ட பணத்தை உடனடியாக நாட்டின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டியது இருந்தது; இதற்கு இந்திய விமானப்படையின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன; சி-17, சி-137ஜே ஹெர்குலஸ் ஆகிய விமானங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் எடுத்து செல்லப்பட்டன; இவ்வாறு 86 முறை விமானங்கள் ரூபாய் நோட்டுக்களை ஏற்றிச் சென்ற வகையில், இதற்கென தனியாக ரூ. 29 கோடியே 41 லட்சத்தை கட்டணமாக இந்திய விமானப்படைக்கு செலுத்த வேண்டியதாயிற்று என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.பணமதிப்பு நீக்கத்துக்குப் பின், 2016 – 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருவாய் 23.5 சதவிகிதம் குறைந்து விட்டதாகவும், மறுபுறத்தில் செலவுகள் 107.8 சதவிகிதம் அதிகரித்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.