கோவை,
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக திங்களன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைமறியல் போரட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்துராஜ், சக்திவேல், சாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வே.திருவரங்கன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஜான் ஆன்ஸ்டின், மாவட்ட தலைவர் வாசுதேவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகபெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல் மற்றும் 44 பெண்கள் உள்ளிட்டு 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலவிநாயகம் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.