புதுதில்லி,

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் உட்பட 3 பேரின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி தனது நண்பருடன் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அந்த மாணவியை உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் தூக்கியெறிந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகிய 4 பேருக்கு தில்லி நீதிமன்றம்  தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை  உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற மறுஆய்வு செய்யக்கோரி வினய் சர்மா, முகேஷ், பவன், ஆகிய 3 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆறாவது குற்றவாளி 18 வயதுக்கும் குறைவான சிறுவன் என்பதால், சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் வைக்கப்பட்டு, மூன்று ஆண்டு கால தண்டனைக்கு பிறகு டிசம்பர் 2015ல் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மேல் முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார், உச்சநீதி மன்றத்தின்  இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளார். நீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை காப்பாற்றப்பட்டு விட்டதாக கூறினார். நீதி தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே விரைவாக தூக்கு தண்டனையை நிறைவேற்றி இதர பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.