திருப்பூர்,
காலிப் பணியிடங்களை நிரப்புவது, விடுமுறை நாட்களில் வேலை வாங்குவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் ஏழாவது நாளான திங்களன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருப்பூரில் இப்போராட்டத்தில் பங்கேற்ற பெண் அலுவலர்கள் சுமார் 40 பேர் உள்பட 270 பேரை காவல்  துறையினர் கைது செய்தனர்.

ஊராட்சி செயலர்கள் முதல் வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் வரை ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படும் சுமார் 20 ஆயிரம் பேர் தமிழகத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எனினும் அரசுத் தரப்பில் இவர்களது கோரிக்கைகள் குறித்துப் பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்கள் பலவற்றை பார்த்திருக்கிறோம் என்று பொறுப்பற்ற முறையில் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.  இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக திங்களன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக திங்களன்று காலை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பெருந்திரளானோர் திரண்டனர். அங்கு சாலை மறியல் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி போராட்டத்துக்கு தலைமை ஏற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ரமேஷ் உரையாற்றினார்.

இதையடுத்து கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் சாலை மறியல் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது வாழ்த்திப் பேசினார் . பின்பு அனைவரும் கோரிக்கை முழக்கம் எழுப்பியபடி ஆட்சியரகம் முன்பாக பல்லடம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பெண் அலுவலர்கள் உள்பட 270 பேரை கைது செய்தனர். தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும், வியாழனன்று சென்னையில் முதல்வரைச் சந்திக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் போராட்டத்திற்குத் தலைமை ஏற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.