ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பென்னிக்கல் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 250க்கும் மேல் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். தலித் மாணவர் சதீஷ்குமார் கெலமங்கலத்திலுள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ், சாதி பெயர் சொல்லி திட்டியுள்ளார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த அம்பேத்கர் டாலரை அறுத்தெறிந்து தாக்கியுள்ளார்.

பின்னர், சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று தாக்கப்பட்டது குறித்து பெற்றோர்களுடன் தெரிவித்துள்ளார். மேலும் பயத்தால் அடுத்த நாள் பள்ளிக்கும் அவர் செல்லவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து அவர் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து பேருந்து நிலையத்தில் சதீஷ்குமார், அண்ணன் பூவரசன் இருந்தபோது, அங்கு வந்த வெங்கடேஷ் இவர்களை பார்த்துவிட்டு மீண்டும் சாதிப் பெயர் சொல்லி அடித்துள்ளார். ஏன் எங்களை அடிக்கிறீர்கள் எனக் கேட்டபோது, அருகே இருந்த வெங்கடேஷின் நண்பர்கள் சிலர் கட்டையை கொண்டு இருவரையும் தாக்கியுள்ளனர்.  இதில் காயமடைந்த சதீஷ்குமார், பூவரசன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். நீங்கள் மருத்துவமனைக்கு செல்லுங்கள் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டனர். பின்னர் இருவரும் ஓசூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப் பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். எந்தவித காரணமும் இன்றி சாதிப்பெயரைச் சொல்லி தாக்கிய வர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.