தரங்கம்பாடி;
கிறிஸ்தவத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் நாட்டிலிருந்து தரங்கம்பாடிக்கு அனுப்பப்பட்டவர்தான் ஜெர்மனி நாட்டவரான சீகன்பால்கு. 222 நாட்கள் சோபியா ஹெட்விக் என்னும் பெயர் கொண்ட கப்பலில் பயணம் செய்து தரங்கம்பாடிக்கு 1706 ஜூலை 9 இல் வந்து சேர்ந்தார். எந்த நோக்கத்திற்காக கடல் கடந்து வந்தாரோ அதையும் தாண்டி எண்ணற்ற சேவைகளை தமிழ் மண்ணுக்கு செய்து காட்டினார் சீகன்பால்கு.

அவ்வளவு எளிதாய் கற்றுக் கொள்ள முடியாத தமிழை, மிகுந்த ஆர்வத்தின் காரணமாக விரைவாக கற்றுக்கொண்டு எழுதவும் படிக்கவும் சரளமாக தமிழில் பாடங்கள் எடுக்கவும் தேர்வாகினார். 1715 இல் பைபிளை (புதிய ஏற்பாடு) ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரத்தை வரவழைத்து பொறையார் கடுதாசிப் பட்டறையில் அச்சகம், காகித ஆலை, மை கூடம் ஆகியவற்றை அமைத்து இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மொழியை காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார். அதன் பின்னர் தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி, கொடுந்தமிழ் அகராதி மற்றும் இந்து சமய நூல்கள் என எண்ணற்ற தமிழ் நூல்களை ஓலைச்சுவடியில் பணக்காரர்கள் மட்டுமே படித்த நிலையை உடைத்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார். ஜெர்மனி மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இன்று தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதற்கு சீகன் பால்குவே காரணம்.

ஜெர்மனி ஹல்லே பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையை நிறுவுவதற்கும் இவரே பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழர்களுக்கு கல்விக் கூடங்களை அமைத்து, பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே விதவைகளை ஆசிரியர்களாகக் கொண்டு, பெண்கள் பள்ளிகளை அமைத்து சமுதாய புரட்சிக்கு வித்திட்டவர் இவர். தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து போராட தூண்டியவர் சீகன்பால்கு. தமிழ் மொழியே எனக்கு தாய்மொழியாகி விட்டது என பெருமையாக பதிவு செய்து தரங்கம்பாடியிலேயே மரித்து, அவரால் 1718 இல் கட்டப்பட்ட புதிய எருசலேம் ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

தமிழ் மொழியை உயர்த்தி பிடித்த சீகன்பால்கு, தரங்கம்பாடி வந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் நன்றி செலுத்தும் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

312 ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடிய தரங்கம்பாடி
சீகன் பால்கு தரங்கம்பாடி வந்த 312 ஆவது தினத்தையொட்டி கடற்கரையோரம் நிறுவப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் அவரது நினைவுகளை போற்றும் விதமாக புதிய எருசலேம் ஆலய சபைகுரு நவராஜ் ஆபிரகாம், பிஷப் ஜான்சன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமன், மாணவர்கள், ஆசிரியர்கள், திருச்சபையினர், பாடல்களை பாடி சீகன் பால்கு சிலை வந்தடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தினர், தரங்கம்பாடி                                            பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, தமிழுக்காக உழைத்த சீகன்பால்கு வந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மத்திய – மாநில அரசுகள் அவரின் சேவையை பெருமைப்படுத்தும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு பிரம்மாண்டமான மணிமண்டபத்தை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழையே ஒழித்துக்கட்ட துடிக்கும் மத்திய பாஜக அரசு தமிழறிஞர் சீகன்பால்குவின் சேவையை அங்கீகரிக்குமா? (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: