கோபிசெட்டிபாளையம்,
கோபிசெட்டிபாளைம் அருகே பிளைவுட் தயாரிப்பு தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீலாம்பாளையத்தில் புதியதாக தனியார் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அதைச்சுற்றிலுள்ள 5க்கும மேற்பட்ட கிராமங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிப்படையக்கூடும். ஆகவே, இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி கெட்டிச்செவியூரிலுள்ள தமிழ்நாடு மின்சாரவாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்தை கிராமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மின் இணைப்பு வழங்கக்கூடாது என்றும் ஆலையை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கோசங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது ஐந்து கிராமங்களில் உள்ள மக்களின் சுகாதாரமும் உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அதனால் ஆலையை அமைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த இரண்டு வருடங்களாக பிளைவுட்ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துறைகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது ஆலைக்கு மின் இணைப்பு வழங்கமின் வாரியத்தினால் புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இதனை மின் இணைப்பு வழங்குவதை உடனடியாக நிறுத்துவதுடன், ஆலைக்கான அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து கேட்டறிந்த காவல்துறையினர், கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார் மனு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் மின் பொறியாளரிடம் புகார்மனுவை அளித்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேநேரம், ஆலை இயங்க அரசு அனுமதியளித்தால் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.