நாமக்கல்,
தமிழகத்தில் தனியார் அமைப்புகள் முட்டை விலையை நிர்ணயம் செய்வது குறித்து மத்திய புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 1,200 கோழிப்பண்ணைகளில், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 5 கோடி கோழிகள் மூலம், தினமும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பானது கொள்முதல் விலை நிர்ணயம் செய்கிறது. குழு உறுப்பினர்கள் முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை நிலவரம் குறித்து விவாதித்து முட்டை விலையை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ நிர்ணயம் செய்கின்றனர். இவ்வாறு பெரிய கோழி பண்ணையாளர்கள் நிர்ணயிக்கும் முட்டை விலையால் சிறு கோழி பண்ணையாளர்கள், நாட்டுக்கோழி மற்றும் வாத்து முட்டைகள் உற்பத்தி செய்யும் சிறு, குறு விவசாயிகளையும் பாதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு பெரிய பண்ணையாளர்கள் கோழி முட்டைகளை தயாரித்து தனியார் அமைப்பு மூலம் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வதால் இயற்கையாக நாட்டுக்கோழி மற்றும் வாத்துக்களை வளர்த்து அதன் முட்டைகளையும், கறிகளையும் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் போகிறது. மேலும், பெரும் பண்ணை கோழிமுட்டைகளுடன் சாதாரண விவசாயிகளின் கோழிமுட்டைகள் போட்டி போட்டு விற்பனை செய்ய முடியாத அவல நிலையுள்ளது. இந்நிலையில், இந்த ஏற்ற தாழ்வை முறைப்படுத்த வேண்டி நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் மத்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், முட்டை விலை நிர்ணயம் குறித்து புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு தொடர்ந்த சந்திரன் கூறியதாவது: கோழி முட்டைகள் விலை நிர்ணயம் செய்வதில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் காரணமாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இந்த குறையை களைய வேண்டி தில்லியில் உள்ள மத்திய அரசின் இந்திய போட்டி ஆணையத்திடம் நாட்டுக்கோழி வளர்க்கும் குறு விவசாயிகள் சார்பாக ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த ஒரு வருடமாக விசாரணை நடத்தப்பட்டு, தற்போது அந்த அமைப்பு முட்டை விலை நிர்ணயம் குறித்து புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த போட்டி ஆணையத்தின் முக்கிய பணி இது மாதிரியான ஏற்றத் தாழ்வு உள்ள வியாபார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பதால், தனது வழக்கிற்கு முறையான தீர்வு கிடைக்கும் என்பதுடன் தனியார் அமைப்புகள் தங்கள் இஷ்டத்திற்கு முட்டை விலையை நிர்ணயப்பதை தடுத்து நெரிப்படுத்தும் நிலை வரும். இதனால் அரசு மற்றும் பொதுமக்களிடம் விற்பனைக்கு வரும் முட்டையின் விலை முறைப்படுத்தப்பட்டு தரமும் மேம்படுத்தும் நிலை ஏற்படும். மேலும் சிறு, குறு நாட்டுக்கோழி மற்றும் வாத்து முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்விலும் பெரும் கோழி பண்ணையாளர்களை போல் உயர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.