திருப்பூர்,
குன்னத்தூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும், மனுக் கொடுக்கும் போராட்டமும் நடைபெற்றது.

குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை சார்பில் ராமசாமி தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே இணைப்பு வழங்க வேண்டும். பொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் நகர கிளை செயலாளர் சின்னசாமி, ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் ஊத்துக்குளி ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் கொளந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் முடிவில் குன்னத்தூர் பேருராட்சி செயல் அலுவலரை சந்தித்து குடிநீர் இணைப்பு கேட்டு 35 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். இரண்டு மாத காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் உறுதி அளித்தார். மேலும், பொன் காளியம்மன் நகர் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.குடிநீர் கட்டண உயர்வை பொருத்த வரையில் தமிழக குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உள்ளதால் கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: