திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாநகரில் மத்திய பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிக்குடி இடமாற்றம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள சப்-ஜெயில் சாலையில் சுமார் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வெங்காய மண்டி கடந்த ஜூன் 30 ஆம் தேதி பழைய பால்பண்ணை அருகே மாற்றம் செய்யப்பட்டது. அங்கு வெங்காய கமிஷன் மண்டி வியாபாரிகள் பழைய வெங்காய மண்டியில் வேலை பார்த்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் புதிய ஆட்களை வைத்து வேலை செய்தனர். இதனால் பழைய வெங்காய மண்டியில் வேலை பார்த்த 276 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

4 தலைமுறைகளாக கடந்த 70 வருடங்களாக வெங்காய மண்டியில் வேலைப்பார்த்த தங்களுக்கு புதிய வெங்காய மண்டியில் வேலை வழங்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிஐடியு, தொமுச, எல்எல்எப், டியுசிசி ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டத்தில் வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக காந்தி மார்க்கெட்டில் உள்ள தக்காளி, இங்கிலீஷ் காய்கறி, பழங்கள், தேங்காய், மாங்காய் உள்பட அனைத்து சுமைப்பணித் தொழிலாளர்களும் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையொட்டி ஞாயிறு மாலை முதல் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக போலீஸ் உதவி ஆணையர் பெரியண்ணன், விக்னேஷ்வரன், திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமர், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, தொமுச தொழிற்சங்க தலைவர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் புதிய வெங்காய மண்டியில் மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலையை உடனே நிறுத்த வேண்டும். பழைய வெங்காய மண்டியில் வேலைப்பார்த்த அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தான் போராட்டத்தை கைவிட முடியும் என்றனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை காலையும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. பின்னர் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் மயில்வாகனன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்களின் பிரச்சனை இன்னும் இரண்டு நாட்களில் பேசி தீர்க்கப்படும். எனவே வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.வேலை நிறுத்தத்தால் ஞாயிறு இரவு மற்றும் திங்கள்கிழமை காலையிலும் காந்தி மார்க்கெட் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதனால் அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.