தருமபுரி,
நீதிமன்ற உத்தரவை அமலாக்க மறுக்கும் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒகேனக்கல் பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல் ஆற்றில் ஏற்கனவே பரிசல் இயக்கிவந்த மாமரத்துகடவு, ஊட்டமலை, கோத்திக்கல் ஆகிய மூன்று வழித்தடங்களிலும், வெள்ளப் பெருக்கிற்கு ஏற்ப பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும், பரிசல் பயணிகளுக்கு தேவையான அளவுக்கு லைப்ஜாக்கிட் வழங்க வேண்டும், பரிசல் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகளுக்கு விபத்து காப்பீடு அமலாக்க வேண்டும், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் பரிசல் ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பரிசல் ஓட்டும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிவறை வசதியும், பரிசல் பழுதுபார்க்கவும், பரிசல் வைக்க, இடம் ஒதுக்கித்தர வேண்டும், பரிசல்துறை, மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல கண்ணாடிகூண்டு பொது வழியை திறக்க வேண்டும், சமையல் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு நவீன சமையல் அறை கட்டித்தர வேண்டும், பிரச்சனைகளை தீர்க்க அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கொண்ட நிரந்தர கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தலைவர் கே.வரதன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டதுணைத் தலைவர் சி. ராஜி, நிர்வாகிகள் முரளி, ஆறுமுகம், சங்க செயலாளர் பிரபு, பொருளாளர் என். முருகேசன், சமையல் தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.கல்யாணி உட்படபலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பென்னகரம் டிஎஸ்பி அன்புராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நீர்வீழ்ச்சிக்கு செல்லகண்ணாடிகூண்டு பொதுவழியை திறக்கவும், பரிசல் பயணிகளுக்கு லைப்ஜாக்கெட் 500 உடனடியாக வழங்குவதாக ஒப்புகொண்டனர். மேலும் ஊட்டமலை வழியாக பரிசல் இயக்க கர்நாடக அரசிடம் பாதுகாப்பு குறித்து பேசிவிட்டு அனுமதிப்பதாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுஎட்டப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: