காஞ்சிபுரம்,
விவசாய நிலங்களும் குடியிருக்கும் வீடும் பறிபோகும் நிலையில் எட்டுவழிச்சாலை எங்களுக்கு வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்டட ஆட்சியரிடம் அருமபுலியூர் கிராம மக்கள் தனித்தனியாக கோரிக்கை மனுவை வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அரும்புலியூர் கிராமத்தில் சென்னை சேலம் எட்டுவழிச் சாலைக்காக 20 வீடுகளும் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் வீடுகளையும் நிலங்களையும் இழக்கவிரும் பாத விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து இந்த சாலைத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து திங்களன்று மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் கிராம மக்கள் சந்தித்து மனுகொடுத்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்டச் செயலாளர் கே.நேரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்திரமேரூர் வட்டச் செயலாளர் சி.பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று முதல் அளவிடும் பணி:                                                                                                    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 வழிச் சாலைத் திட்டதிற்கு நிலம் அளவிடும் பணி செவ்வாய் கிழமை (ஜூலை 10) முதல் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் 10 கிராமங்கள், உத்திரமேரூர் வட்டத் தில் 27 கிராமங்கள், செங்கல்பட்டு வட்டத்தில் 5 கிராமங்கள் என 42 கிராமங்கள் வழியாக எட்டு வழிச்சாலை அமைய உள்ளது. இது சம்ந்தமாக 10 நாட்களாக வருவாய், காவல் துறையினர் கிராமங்களில் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கான நில அளவைப் பணிகள் செவ்வாயன்று (ஜூலை 10) தொடங்க உள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ தூரம் அமைய உள்ள இச்சாலை 110 மீட்டர் அகலம் அமைய உள்ளது. ஆனால் தற்போது 70 மீட்டர் மட்டுமே நிலம் எடுக்கப்படும் மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை அமைய உள்ள வழித்தடத்தில் 80 வீடுகள் மட்டுமே காலிசெய்யப்பட உள்ளது. காலி செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக அதே கிராமத்திலோ அல்லது 1 கி.மீ சுற்றளவுக்குள் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு பசுமைவீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். சாலைச் செல்லும் வழியில் இரண்டாகப் பிரியும் விவசாய நிலங்களில் உள்ள விவசாயிகள் ஒன்றுசேர்ந்து மனு அளித்தால் அந்த இடத்தில் விவசாயப் பொருட்களை கொண்டு செல்லும் விதமாக சுரங்கப்பாதை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மாவட்ட வருவாய் அலுவலர் நிலஎடுப்பு நர்மதா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.