திருப்பூர்,
திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ மாணிக்காபுரம் பகுதியில் இருந்து குறைவான தூரத்தில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதிக்குச் செல்வதற்கு பயன்படும் ஊராட்சி ஒன்றிய சாலை குண்டும், குழியுமாக இருபுறமும் முட்புதர்கள் மண்டி படுமோசமாக உள்ளது. இந்த சாலை செப்பனிடப்பட்டால் இந்த வட்டாரத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைந்து மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை சாலை மாணிக்காபுரம் பிரிவில் இருந்து நொய்யல் அணைக்கட்டு வழியாக இந்த சாலை செல்கிறது. இங்கிருந்து 4 கிலோமீட்டர் சென்றால் ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதியை அடைய முடியும். ஆனால் ஒருபுறம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உரிய இந்த சாலை 3.75 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எஞ்சிய தூரம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உரியதாகும். நீண்ட காலமாக இந்த சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்படி சாலையைப் பயன்படுத்தி வந்தாலும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் இந்த சாலைப் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இந்த சாலையில் ஏராளமான முட்புதர்கள் மண்டி, சாலை முழுவதும் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக இருக்கிறது. இதனால் ஊத்துக்க்குளி ஆர்.எஸ் பகுதிக்கு முதலிபாளையம் சிட்கோ, மாணிக்காபுரம் பகுதியில் இருந்து ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதிக்கு, காசிபாளையம் பாலம் வழியாக நொய்யல் ஆற்றைக் கடந்து, திருப்பூர் சாலை ச.பெரியபாளையம் வழியாக 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையில், ஊத்துக்குளி வட்டாரத்தில் இருந்து இங்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. அத்துடன் வேலம்பாளையம், அணைப்பாளையம், செம்பவள்ளம், மாணிக்காபுரம், பொன்னாபுரம் உள்ளிட்ட பகுதி மக்களும் ஊத்துக்குளி வந்து செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடையும் வாய்ப்புள்ள இந்த சாலையை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் செப்பனிட வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் இரு ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் இந்த ஒரு சாலை வருவதால் உரிய அக்கறை செலுத்தாமல் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும் போக்கு தொடர்கிறது என்றும், திருப்பூர் வட்டாரத்தின் வடகிழக்கில் உள்ள இந்த பகுதிகள் விரைவாக விரிவடைந்து வரும் நிலையில், மக்களின் போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு மாணிக்காபுரம் – ஊத்துக்குளி ஆர்.எஸ். சாலையை மாநில அரசு நெடுஞ்சாலையாக மாற்றி, உரிய நிதி ஒதுக்கி இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறினார். இந்த சாலை மேம்படுத்தப்பட்டால், தொழிலாளர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தொழில் வர்த்தகத் துறையினர் மட்டுமின்றி விவசாயிகளும் பயனடைவர் என்று ஆர்.குமார் தெரிவித்தார். எனவே இந்த சாலையை நிர்வாகரீதியாக மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றி உரிய சீரமைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.