அகர்தலா, ஜூலை 9-

சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய திரிபுரா பாஜக மாநில அரசு அதனைச் செய்வதற்குப் பதிலாக, அப்பாவி மக்களையும், கட்சி ஊழியர்களையும் கொன்று குவிப்பதற்கு எதிராகவும், நாடு முழுதும் தனியார் ராணுவத்தினர் மூலம் அப்பாவி மக்களைக் கொன்றுகுவிப்பதற்கு எதிராகவும், இவ்வாறு பாஜக பின்பற்றிவரும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து வரும் ஜூலை 24 அன்று தலைநகர் புதுதில்லியில் நாடாளுமன்றம் முன்பு கண்டனப் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் கட்சிக் கிளைகள் நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்/பேரணி மேற்கொள்வார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் முடிவுகள் குறித்து கட்சி அணியினர் மத்தியில் உரையாற்றுவதற்காக அகர்தலா வந்துள்ள சீத்தாராம் யெச்சூரி, ஞாயிறு அன்று மாலை செய்தியாளர்களிடையே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“திரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி தொடர்ந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து எங்கள் ஊழியர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். எங்கள் கட்சி அலுவலகங்கள், வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்கள் சூறையாடப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய மாநில அரசின்  பாஜக அமைச்சர் ஒருவரே “பிள்ளை பிடிப்பவர்கள்”மாநிலத்திற்குள் ஊடுருவியிருப்பதாக வதந்தியைக் கிளப்பி, முஸ்லீம் ஒருவரைக் கொன்றிருக்கிறார்கள். சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய மாநில அரசின் அமைச்சரே இவ்வாறு வதந்தியைக் கிளப்பிவிட்டு, இக்கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

இவ்வாறு திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் பசுப்பாதுகப்புக்குழு மற்றும் தார்மீகக் காவலர்கள் (moral police) என்கிற பெயர்களில் தனியார் ராணுவத்தினர் மூலமாக அப்பாவி மக்களைக் கொலை செய்து வருகின்றனர். இத்தகைய இவர்களின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து வரும் ஜூலை 24 அன்று நாடாளுமன்றத்தின் முன்பு இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்/பேரணி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துக் கிளைகளும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்/பேரணிகள் நடத்திடவும் உள்ளனர்.

ஆர்எஸ்எஸ்/பாஜக நாட்டில்  மக்களில் ஒருசிலருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, கொலை செய்துவருவது என்பது நாட்டிற்கும் நாட்டில் இதுநாளும் கட்டிக்காக்கப்பட்டுவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்த பண்புக்கும், அனைவரையும் மதித்து ஒழுகும் பண்பிற்கும் மிகவும் எதிரான, மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் அரசு சனிக்கிழமையன்று, மூன்று இளைஞர்களைக் கொன்றுள்ளது. இதில் ஒருவர் இளம்பெண். கல்லெறிந்தவர்களுக்கு எதிராக நேரடியாக, ஆளுநர் அரசு, துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கிறது. இதை ஏற்க முடியாது. மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்வதற்கு முதலில் கண்ணீர்ப் புகை, பின்னர் குண்டாந்தடி, பின்னர் ரப்பர் குண்டுகள், பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடித்தல் என்று பல அடுக்குகளில் நடவடிக்கை எடுத்திடவேண்டும். அதனையெல்லாம் செய்யாமல் நேரடியாகத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு காஷ்மீர் பிரச்சனையைப் பயன்படுத்தி, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுதும் மதவெறி அடிப்படையில் மக்கள் மத்தியில் மோதலை உருவாக்கிட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்/பாஜகவின் குறிக்கோளாகும். இது நாட்டுக்கும் நாட்டின் சமூக அமைப்புக்கும் மிகப்பெரிய அளவில் பேரழிவினை ஏற்படுத்திடும். இதனை அனுமதிக்கக்கூடாது. இடதுசாரிக் கட்சிகளும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து இதனை முறியடித்திட முன்வர வேண்டும்.

அடுத்து, மத்திய மோடி அரசு விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளது. இது எம்.எஸ். சாமினாதன் ஆணையம்  அளித்திட்ட சமன்பாட்டின்படி நிர்ணயிக்கப்படவில்லை. மிகவும் மோசடியான முறையில் அரசு நிர்ணயித்திருக்கிறது. மேலும் விவசாயிகள் விளைவித்த விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதார விலையின்  அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் பல மாநிலங்களில் கிடையாது.

எனவே, விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்துகிறார்கள்.  அதேபோன்று விவசாயிகள் – தொழிலாளர்கள் இணைந்து தங்கள் கோர்க்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 5 அன்று தலைநகர் தில்லியில் மகத்தான பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இவ்விரண்டு இயக்கங்களுக்கும் நாட்டிலுள்ள இடதுசாரிக் கட்சிகள் முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளன.”

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.