திருவண்ணாமலை,
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

8 வழி பசுமை சாலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ஆம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில் விவசாயக் குடும்பத்தினர் மற்றும் எதிர்ப்பு இயக்கத்தினர் ஒன்றுகூடி அரசாணை நகலை எரிக்கும் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், 8 வழிச் சாலைக்கான அரசு ஆணை நகலை எரித்தனர்.  இதில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, நிர்வாகிகள் பல ராமன், அழகேசன், டி.கே.வெங்கடேசன், சிபிஎம் நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், பி.செல்வம், இரா.பாரி, எம்.பிரகலநாதன், சந்திரசேகரன், எஸ்.ஆனந்தன், மாதர் சங்கம் எஸ்.செல்வி, வழக்கறிஞர்கள் அபிராமன், கண்ணன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 99 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 63 பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  இதனைத் தொடர்ந்து 63 பேரையும் சொந்த பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என சனிக்கிழமையன்று நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் இருந்து அவர்கள் அனைவரும் ஞாயிறன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையின் வாயிலில் விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழ்த்து முழக்கங்களுடன் அவர்களை வரவேற்றனர். சிபிஎம் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை வரும் வழியில் போளூர், கலசப்பாக்கம், மல்லவாடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: