திருப்பூர்,
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்தார்.

திருப்பூரில் தனியார் கல்லூரியில் ராகிங் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் ஞாயிறன்று நடந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான குலுவாடி ஜி.ரமேஷ் பேசியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அது நாளைய சமூகத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும். நாம் அனைவரும் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்துவதற்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, சுத்தமான குடிநீர், தரமான சாலை வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை.

இதில் கடமை தவறுகின்ற அரசின் மீது நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, நாம் அனைவரும் நாட்டில் உள்ள அடிப்படை சட்டங்களை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். இது போன்ற அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நாம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தும் போது மக்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதும், அரசு மக்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் அடிப்படை உரிமைகளை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தெரிந்துகொள்வது அந்த சமூகத்துக்கான ஆரோக்கியமான அம்சமாகும் என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, திருப்பூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: