தரங்கம்பாடி,
மயிலாடுதுறை ஆத்துக்குடி கிராம பள்ளியின் புதிய கட்டடம் தரமற்று உள்ளதால் சமீபத்தில் பெய்த லேசான மழையில் கட்டடம் கரைந்து விழ ஆரம்பித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தர்மதானபுரம் ஊராட்சி ஆத்துக்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடப் பணி சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நிதியிலிருந்து ரூ.12லட்சம், ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட்டு மாணவர்கள் பயன்பா ட்டிற்கு வரவுள்ள கட்டடத்தின் உறுதி தன்மை அண்மையில் பெய்த லேசான மழையில் தெரியவந்துள்ளது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள், ஆட்டுக்கால், மடப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து இங்கு பயில்கின்றனர். தற்போது பெய்த லேசான மழையில் பள்ளி புதிய கட்டடத்தை தாங்கி நிற்கக் கூடிய பில்லர்கள் கரைந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முற்றிலும் தரமின்றி சவுடு மண்ணை மட்டும் வைத்து ஜல்லி, கம்பி இல்லாமல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வலுவில்லாமல் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டடம் கட்டியுள்ளனர்.ஏழை- எளிய மாணவர்கள் பயிலும் பள்ளியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அச்சத்துடன் பெற்றோர் தவிக்க வேண்டும் என்ற ரீதியில் கட்டப்பட்டுள்ளது.

பள்ளி புதிய கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும். வலுவிழந்த கட்டடத்தை இடித்து விட்டு மீண்டும் கட்ட வேண்டும். மக்களின் பணத்தை கொள்ளையடித்து, ஊழலுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகேந்திரன், ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலாளர் அறிவழகன் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.