தாராபுரம்,
தாராபுரம் அமராவதி ஆற்றுபடுகையில் மணல் கடத்த முயன்ற இரண்டு லாரிகள் பறக்கும்படை சோதனையில் பிடிபட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கவுண்டையன்வலசு அமராவதி ஆற்றுப்படுகையில் நள்ளிரவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆற்றுப்படுகையில் மூன்று டிப்பர் லாரிகள் மணல் அள்ளுவதற்காக தயார் நிலையில் நின்றது. அப்போது பறக்கும்படை காவல்துறையினர் அவர்களிடம் விசாரிக்கையில், மணல் அள்ளுவதற்காக வந்ததாகவும், லோடுமேன் வருவதற்காக காத்திருப்பதாகவும் லாரி ஓட்டுனர்கள் கூறினர். மேலும், லாரி ஓட்டுனர்களிடம் விசாரித்த போது காங்கயம் நத்தக்கடையூரை சேர்ந்த விஸ்வநாதனின் மனைவி வித்யாபிரியாவிற்கும், கரையூர் மருதகவுண்டன்வலசை சேர்ந்த மணிவாசகம் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும் தெரியவந்தது. இரண்டு லாரி ஓட்டுனர்களிடம் பறக்கும்படையினர் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, மூன்றாவதாக பிடிபட்ட லாரியை ஓட்டுனர் வேகமாக எடுத்து சென்றுவிட்டார். பறக்கும் படையினரால் பிடிபட்ட இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து மூலனூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மூலனூர் காவல்துறையினர் இரண்டு லாரிகளை தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.