சென்னை,
பொதுமக்களுக்கு தரமான கண் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

‘இன்ட்ராகுலர் இம்ப்ளாண்ட் அண்ட் ரிப்ராக்டிவ் சொஸைட்டி ஆப் இந்தியா’ சார்பில் உலகளாவிய கண் அறுவை சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இதனை துவக்கிவைத்துப்பேசிய வெங்கய்ய நாயுடு, உலக அளவில் 3 கோடியே 60 லட்சம் பேர் பார்வைற்றவர்களாக உள்ளனர். வரும் 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 80 லட்சத்து 25 ஆயிரம் (25 மில்லியன்) மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கண் நோய்க்கான அதிநவீன சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணத்துடன் வழங்கப்படுவதால், ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சையைப் பெற முடியவில்லை. எனவே, அரசு மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்பத்தில் தரமான கண் சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும்.

2020-ம் ஆண்டில் பார்வைத்திறன் குறைபாட்டை 0.3 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்வையின்மைக்கு கண்புரை நோயே முக்கியக் காரணமாக இருக்கிறது. பார்வையற்றவர்களில் 63 சதவீதம் பேர் கண்புரை நோயால்தான் பார்வை இழந்துள்ளனர்.  இந்தியாவில் 5 கோடி பேர் இரண்டாம் வகைநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் நீரிழிவு நோயின் தலை நகராக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் கண் மருத்துவர்களுக்கு எத்தகைய சவால்கள் காத்திருக்கின்றன என்பதை நாம் அறிய வேண்டும். இத்தகைய சவால்களை மத்திய அரசு மட்டுமே எதிர்கொள்ள முடியாது. எனவே, மாநில அரசு,உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு கண் பாதுகாப்பு சேவைகளை வழங்க வேண்டும். மேலும், கண் தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்ட்ராகுலர் இம்ப்ளாண்ட் அண்ட் ரிப்ராக்டிவ் சொஸைட்டி ஆப் இந்தியா (ஐஐஆர்எஸ்ஐ) பொதுச் செயலாளர் அமர் அகர்வால் மற்றும் கண் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.