தீக்கதிர்

தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை

புதுதில்லி,
கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளத்தைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் , கபினி அணையில் இருந்து சனிக்கிழமை மாலை விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட் டங்களில் கனமழை, உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் தெலுங்கானா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் எனவும், குறிப்பாக வடக்குப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.