கோவை,
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மாணவர் சங்க மாநாட்டு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு ஹோப்காலேஜ் பிஆர்புரத்தில் பிரதீப் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். சங்க கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் அர்ச்சனா ஏற்றிவைத்தார். மாவட்ட துணை தலைவர் காவியா வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து பேராசிரியர் பாலுச்சாமி உரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கேப்டன் பிரபாகரன் அறிக்கையை முன் வைத்து பேசினார். மாநாட்டு பிரதிநிதிகள் விவாதம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாதர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜோதிமணி, உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர்.\

இதில், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழக மாநிலக்குழுவை கலைக்ககூடாது. அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட்தேர்வை ரத்து செய். அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து, அரசு பள்ளி மற்றும் கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இம்மாநாட்டில் புதிய மாணவர் சங்க மாவட்டத் தலைவராக தினேஷ், செயலாளராக கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 28 பேர் கொண்ட மாவட்டகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவுசெய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி உரையாற்றினார். முடிவில் கோகுல் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.