அகமதாபாத்;
குஜராத்தை வைர நிறுவனம், 11 வங்கிகளில் மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 654 கோடியை மோசடி செய்துள்ள நிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ‘பாங்க் ஆப் இந்தியா’ வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு டைமண்ட் பவர் இன்ஃப்ராஸ்டரக்சர் (Diamond Power Infrastructure Ltd – DPIL) என்ற பெயரில் கேபிள் ஒயர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம், விரிவாக்கம் என்ற பெயரில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 11 அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளது. இந்த கடன்தொகை, 2016-ஆம் ஆண்டு ஜூன் 29 தேதி வரை, மொத்தம் 2 ஆயிரத்து 654 கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும்.ஆனால், இதனை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக, டிபிஐஎல் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் டைமண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ் நரையன் பாத்நகர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், மோசடி வழக்கில் சுரேஷின் மகன்கள் அமித், சமித் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

தற்போது, டைமண்ட் கம்பெனியின் கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ‘பாங்க் ஆப் இந்தியா’வின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் அக்னி கோத்ரி, துணைப் பொதுமேலாளராக இருந்த பி.கே. ஸ்ரீவஸ்தவா ஆகியோரையும் சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.