===மதுக்கூர் இராமலிங்கம்===                                                                                                                                             ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களால் இரண்டரை லட்சம் பேர் பலன் அடைந்து விட்டார்களாம். இது அந்த இரண்டரை லட்சம் ஜீவன்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

இதைக் கொண்டாட பல கோடி ரூபாய் செலவில் ராஜஸ்தான் பாஜக அரசு தலைநகர் ஜெய்ப்பூரில் விழா ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாகவும் இந்த அலையில் சிக்கி பலர் சின்னாபின்னமாகிவிட்டதாகவும் பாஜகவினர் பேசி வந்தனர். இப்போது எங்கேயும் மோடி அலை வீசுவதில்லை. வறட்சி பாதித்த பகுதி போல வறண்டு கிடக்கிறது.

ஜெய்ப்பூர் கூட்டத்திற்கு 5600 பஸ்களில் ஆட்களை பிடித்து வந்துள்ளனர். இதற்கு மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளனர். 33 மாவட்டங்களிலிருந்தும் ஆட்களை பிடித்து வரவேண்டும் என்று முதல்வர் வசுந்தரா உத்தரவிட்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களாக இந்த வேலை நடந்துள்ளது. இவ்வாறு பிடித்து வந்தவர்களில் பலர் ஆங்காங்கே சுற்றுலா சென்றுவிட, தப்ப முடியாமல் சிக்கிவிட்ட கூட்டத்தினரிடம் வழக்கம் போல மோடி முழங்கியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் விளை பொருளுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை தருவேன் என்றார். விவசாயிகள் தற்கொலைக்கு இனி வாய்ப்பே இல்லை என்றும் முழங்கினார். ஆனால் கடந்த நான்காண்டுகளாக வாயால் வடை சுட்டதை தவிர விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.

இப்போது ஜெய்ப்பூர் கூட்டத்தில் 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மாற்றியே தீருவோம். அதற்காகத்தான் அல்லும் பகலும் அயராமல் உழைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார் மோடி. இவரது ஆட்சி 2019ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. ஆட்சிக்காலத்தில் எதுவும் செய்யாமல் 2022ல் இரட்டிப்பாக்க போகிறாராம்.

இதே ராஜஸ்தானில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கூறி, விவசாயிகள் தங்களைத்தாங்களே மண்ணில் புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். 1350 ஏக்கர் நிலம் அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராடினர். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மாநில பாஜக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்து விவசாயிகளை வேட்டையாடியது. விவசாயிகள் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் விவசாயிகளின் போராட்ட நாயகனுமான அம்ராராம் இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.மகாராஷ்டிர மாநில விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டம் இந்தியாவையே திரும்பிப்பார்க்கச் செய்தது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி விவசாயிகள் தவிக்கும் நிலையில், 2022ஆம் ஆண்டு வருமானத்தை இரட்டிப்பாக்க போவதாக காதிலே தேன் தடவுகிறார் மோடி.

விவசாயிகளை மோடி அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் தர மறுக்கும் விவசாயிகளை மாநில அதிமுக அரசு மூலம் நடத்தும் விதமே சாட்சி. துண்டு துக்காணி நிலங்களை தர மறுத்து அழுது புலம்பும் விவசாயிகளையும், பெண்களையும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தி கைது செய்கின்றனர். நோட்டீஸ் கொடுப்பது கூட தேச விரோதக் குற்றமாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க அளவீடு செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் எட்டு வழிச்சாலை வந்த பிறகு அந்தப் பகுதியில் விவசாயம் செழிக்கும் என்று விவசாய விஞ்ஞானி தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நிலமில்லாமல் விவசாயம் செய்யும் செய்முறையை கண்டுபிடித்திருக்கிறார் போலிருக்கிறது. மறுபுறத்தில் பொன். ராதா கிருஷ்ணன் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பயங்கரமாக ஊடுருவி விட்டதாக பயம் காட்டுகிறார். என் நிலம், என் உரிமை என்று சொல்லும் ஏழை பாழைகளெல்லாம் இவருக்கு பயங்கரவாதிகளாகவே தெரிகின்றனர்.

நாடு முழுவதும் 32 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு துவக்கப்பட்டுவிட்டதால் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி மூச்சுதிணறிக் கொண்டிருப்பதாகவும் மோடி பேசியிருக்கிறார். சமையல் எரிவாயு மானியத்திலிருந்து 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலி வரை அனைத்தும் வங்கிக்கணக்கிலேயே செலுத்தப்படும் என்று கழுத்தை நெரித்ததால்தான் பலரும் வேறு வழியின்றி வங்கிக் கணக்கு துவக்கினர். குறைந்தபட்ச இருப்பு இல்லையென்று கூறி பலரது வங்கிக்கணக்கு மாதாமாதம் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. மறுபுறத்தில் வங்கிக்கடன் வாங்கிய, மோடிக்கு வேண்டிய மோடிகள் நாட்டை விட்டு தப்பித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டதோடு இல்லாமல், வங்கிகள் முழுவதையும் தங்களிடமே கொடுத்து விடுமாறு தொந்தியை தடவுகின்றனர்.காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி பின்தங்கி விட்டதாகவும் தாம் ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி தறி கெட்டு கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதாகவும் ஜெய்ப்பூர் கூட்டத்திலும் மோடி கூறியுள்ளார். கடந்த நான்காண்டுகளாக வாய் வலிக்காமல் இந்த ஒன்றையே கூறி கொண்டிருப்பதாக மோடிக்கு எதாவது பட்டம் கொடுக்கலாம். அதற்கு ஏழு கோடி ரூபாயில் விழா நடத்தாமல் இருந்தால் சரி.

காங்கிரஸ்காரர்கள் பலரும் ஜாமீனில் திரிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சி தற்போது ஜாமீன் வண்டிபோல காட்சியளிக்கிறது என்று மோடி கிண்டலடித்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு கூட இல்லை. முன் ஜாமீன் என்று ஒன்றும் உண்டு என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.