சென்னை:
தோழர் பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டனம் முழங்குமாறு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலாண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜூன்-30, ஜூலை-1 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. மாநிலக்குழு கூட்டத்தில் சேலம் முதல் சென்னை வரை போடப்படும் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாய மக்களை சந்தித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஜூலை 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாதர் சங்க தமிழ் மாநிலக்குழு அறிவித்தது. அந்த அடிப்படையில் தருமபுரி மாவட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் மாவட்ட செயலாளர் கிரைசாமேரி மாவட்டத் தலைவர் ஜெயா, பொருளாளர் ராஜாமணி, கிருஷ்ணவேணி, மல்லிகா, கண்ணகி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு சென்றது. கோப்பூர், சாமியாபுரம், ஆவரங்காத்தூர், அதிகாரப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து அவர்களது நிலைமையை கேட்டறிந்தனர்.

அடுத்த கிராமத்திற்கு சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் பாலபாரதியை போகக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர். “நாங்கள் மக்களை தானே சந்திக்க செல்கிறோம், இது எங்களது அடிப்படை உரிமை தானே” என்று வாதிட்டார். இது செய்தி ஊடகங்களில் பரவியது.
பாப்பிரெட்டிபட்டி கோட்டைமேடு கிராமத்திற்கு செல்லும் போது காவல்துறை முற்றிலுமாக அவர்களை தடுத்து நிறுத்தி பாலபாரதி தலைமையில் சென்ற 15 பேரையும் கைது செய்தது. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக பொதுமக்களையும், விவசாயிகளையும் சந்தித்தது தவறா?

8 வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக யாரும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கக் கூடாது, பேசக்கூடாது, போராடக் கூடாது என்று மிரட்டும் வகையில் தமிழக அரசு அடக்கு முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டக் குழுக்கள் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்துமாறு மாநிலகுழு சார்பில் கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.