புதுக்கோட்டை;
பேருந்து நிறுத்தம், கடைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொதுவெளியில் சிரித்துப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்கோட்டை அருகே உள்ளது முரட்டுச் சோளகம்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ள தலித் இளைஞர்கள் கல்வி அறிவு பெறுவதையும், அவர்களில் சிலர் அரசு வேலைக்குச் செல்வதையும் சாதி வெறியர்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்து வந்துள்ளனர். தேநீர் கடைகளில், பேருந்து நிலையத்தில் சிரித்துப் பேசிக்கொண்டால் கூட வெறுப்புடன் பார்த்து வந்துள்ளனர். உள்ளூர் மட்டத்தில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் தலித் இளைஞர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை. குறிப்பாக பேருந்து நிறுத்ததில் உட்கார்ந்து இருப்பது சில சாதி வெறியர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அதை குற்றமாக கருதியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக முரட்டுச் சோளம்பட்டியிலிருந்து பேருந்தில் செல்லும் தலித் வகுப்பைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்களை சங்கேத பாசையில் கேவலமாகப் பேசி கிண்டல் செய்யும் நடவடிக்கையில் சில சாதிவெறிப் பிடித்த இளைஞர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று தலித் இளைஞாக்ள் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி சாதியைச் சொல்லி மிகவும் இழிவாகப் பேசி தாக்கியுள்ளனர். பயந்து ஓடிவர்களையும் விரட்டி, விரட்டித் தாக்கியுள்ளனர். தலித்துகளின் வீடுகளுக்குள்ளும் புகுந்து தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்சியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து பேசியபோது, முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், வட்டாட்சியர் முன்னிலையில் சமாதானக்கூட்டம் நடத்தி எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். உறுதியளித்தபடி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.